கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்

2 days ago 1

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"பெஞ்சல் புயலின் தாக்கத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால் மண்சரிவு ஏற்பட்டு மலை உச்சியில் இருந்த பாறைகள் உருண்டு அடிவாரப் பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளில் விழுந்ததில் 7 பேர் சிக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மண்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, சிக்கியிருக்கும் அனைவரையும் பாதுகாப்பான முறையில் மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

புயல் கரையை கடந்த நிலையிலும், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் குறுகிய கால இடைவெளியில் கொட்டித் தீர்த்த கனமழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முழுமையாக முடங்கியுள்ளது.

எனவே, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மண்சரிவில் சிக்கியிருக்கும் 7 பேரையும் பாதுகாப்பாக மீட்பதோடு, கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிட ஏதுவாக உரிய நிவாரணத் தொகையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Read Entire Article