கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகள் தீவிரம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

1 month ago 4

சென்னை: முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மழை தீவிரமாக பெய்யும்போது அதனால் ஏற்படும் பாதிப்புகள், அப்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னையில் பல்வேறுதுறை அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதை தொடர்ந்து சென்னை ஒட்டிய கடற்கரை பகுதியான முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு, மழைநீர் கடலில் சேரும் இடத்தில் இருந்து அகற்றப்படும் மண்ணை அதே பகுதியில் கொட்டி வைக்காமல் உடனடியாக அகற்றி விடுமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பிரதீப் யாதவ், தாரேஷ் அகமது, குமரகுருபரன், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முதலமைச்சரின் உத்தரவின்பேரில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மழைநீர் கடலில் கலக்கும் முட்டுக்காடு முகத்துவார பணிகளை ஆய்வு செய்தோம்.

மழைநீர் தேங்காமல் இருக்க சுமார் ரூ.39 கோடி செலவில் 180 பணிகள் நீர்வளத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளன. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களில் 200 கி.மீ. தூரத்திற்கு தூர்வாரும் பணிகளை செய்துள்ளோம். 200க்கும் அதிகமான பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு இரவு, பகல் பாராமல் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் 3 ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளோம். முதலமைச்சரின் தலைமையிலும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள ஓட்டேரி நல்லான் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், அரும்பாக்கம் கால்வாய், ஒக்கியம் மதகு போன்ற நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் முடிந்திருக்கின்றன. அம்பத்தூர், போரூர், நாராயண புரம், கீழ்க்கட்டளை ஏரிகளின் நீர்வரத்துக்கால்வாய் தூர் வாரப்பட்டுள்ளது.

இவற்றில் இருந்து 1500க்கும் மேற்பட்ட லாரிகளில் ஆகாயத்தாமரைகள், குப்பைகள், கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. கொசஸ்தலை ஆறு, கூவம் ஆறு, அடையாறு ஆகிய 3 ஆறுகளில் உள்ள முகத்துவாரங்களை நிரந்தரமாக திறந்து வைக்கும் வகையில் ரூ.232 கோடி மதிப்பீட்டில் 3 தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பக்கிங்காம் கால்வாய் முகத்துவாரப்பணியும் முட்டுக்காட்டில் ேவகமாக நடைபெற்று வருகிறது,’’ என்றார்.

The post கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகள் தீவிரம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article