சென்னை: கனமழை தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பெறப்பட்ட 249 புகார்களில் 215 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும், சென்னையில் 300 நிவாரண மையங்களும், மாநிலம் முழுவதும் 5147 மையங்களும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த அக்.1 முதல் அக்.14 வரை 10.52 செ.மீ. மழை பெய்துள்ளது. அதாவது வழக்கமான அளவைவிட 68 சதவிகிதம் கூடுதல் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சராசரியாக 2.241 செ.மீ., மழையும், சென்னையில் சராசரியாக 6.5 செ.மீ., மழையும், அதிகபட்ச மழைப்பொழிவுயாக புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலையில் 13.4 செ.மீட்டரும், திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் 10 செ.மீட்டரும், சென்னை மாவட்டத்தில் மண்டலம் 8 மலர் காலனியில் 9 செ.மீட்டரும், மண்டலம் 6 கொளத்தூரில் 9 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது.