நெல்லை,
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு 1,504 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 1,375 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணை நீர்மட்டம் 84.25 அடி நீர் இருப்பு உள்ளது. இன்று காலை நிலவரப்படி அந்த அணை பகுதியில் 28 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
மற்றொரு பிரதான அணையான 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு நேற்று காலை வரை குறைவான நீர்வரத்து இருந்த நிலையில், இன்று காலை வினாடிக்கு 1,375 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 67 அடியை எட்டியுள்ளது. அங்கு 30.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 82.47 அடியாக உள்ளது.