ஒட்டாவா,
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் இந்து மதத்தினர் மற்றும் இந்து மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே, இந்தியா - கனடா தூதரக உறவில் கடந்த சில மாதங்களகா விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாதிகள் மீது வன்முறை தாக்குதலை மேற்கொள்ள இந்திய உள்துறை மந்திரி உத்தரவிட்டதாக கனடா வெளியுறவுத்துறை மந்திரி குற்றஞ்சாட்டினார்.
இதனால், இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் மேலும் அதிகரித்தது. இந்த விவகாரத்தில் உரிய விளக்கம் அளிக்கும்படி கனடா தூதரக்கு இந்திய வெளியுறவுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், கனடாவில் உள்ள இந்து மத வழிபாட்டு தலம் மீதும் பக்தர்கள் மீதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர்.
கனடாவில் பிராம்டன் நகரில் உள்ள இந்து மத வழிபாட்டு தலத்திற்குள் நுழைந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்கிருந்த பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதேவேளை, இந்த தாக்குதலுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்