கனகம்மாசத்திரம் பஜாரில் ஏடிஎம் மையத்தில் பயங்கர தீ விபத்து: பல லட்ச ரூபாய் தப்பியது

1 month ago 5

திருத்தணி: திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் பஜாரில் தனியாருக்குச் சொந்தமான வங்கி ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் நோட்டுகள் அதிர்ஷ்டவசமாக தப்பியது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பஜாரில் எச்டிஎப்சி வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் தினமும் வாடிக்கையாளர்கள் தடையின்றி பணம் எடுக்க ஏதுவாக வங்கி ஊழியர்கள் ரூ.10 லட்சம் வரை நிரப்பி வைப்பது வழக்கம்.

இதனால் கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை திடீரென இந்த ஏடிஎம் மையத்தில் மின்கசிவு ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென எரிந்த தீ, ஏடிஎம் மையம் முழுவதும் வேகமாகப் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

திருத்தணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அருகில் உள்ள கட்டிடங்களில் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். இருப்பினும் ஏடிஎம் மையம் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்தால் ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்ட பல லட்ச ரூபாய் நோட்டுகள் இரும்பு பெட்டியில் இருந்ததால் தப்பியது. இச்சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் கனகம்மாசத்திரம் பஜார் பகுதியில் ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கனகம்மாசத்திரம் பஜாரில் ஏடிஎம் மையத்தில் பயங்கர தீ விபத்து: பல லட்ச ரூபாய் தப்பியது appeared first on Dinakaran.

Read Entire Article