சென்னை,
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வரும் டாக்டர் பாலாஜி ஜெகந்நாதன் என்பவரை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் இன்று கத்தியால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது டாக்டர் பாலாஜியின் உடல்நலம் சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் காவல் துறையினரால் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்படும். அந்த இளைஞர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வது என மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதன்படி, இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது. இதன்படி அவசர சிகிச்சை பிரிவுகள் தவிர, பிற பிரிவுகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில், மருத்துவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என மருத்துவர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
எனினும், அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நாளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி, மருத்துவமனை வளாகங்களில் நாளை தர்ணா போராட்டம் நடைபெறும் என்றும் இதனால், மருத்துவ சேவையில் பாதிப்பு ஏற்படாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. போராட்டம் வாபஸ் பெறப்பட்டாலும், நாளை காலை 8 மணி முதல் 10 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.