கத்திக்குத்து சம்பவம்; டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்க - த.வெ.க. தலைவர் விஜய்

1 week ago 3

சென்னை,

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருகின்றவர் டாக்டர் பாலாஜி ஜெகந்நாதன். இவரை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் இன்று கத்தியால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது டாக்டர் பாலாஜியின் உடல்நலம் சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த செய்தியில், தமிழகத்தில் பட்டப்பகலில் அரங்கேறும் குற்றச்செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் வாயிலாக கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச்செயல்களால் நிரூபணமாகிறது.

சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் டாக்டர் பாலாஜி இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு டாக்டரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்கு தமிழக அரசின் மெத்தன போக்கே காரணம். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த டாக்டர் பாலாஜி, விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.

காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக…

— TVK Vijay (@tvkvijayhq) November 13, 2024
Read Entire Article