சென்னை,
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் பாலாஜி ஜெகன்நாதன் என்பவரை, மருத்துவமனை வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்தப்பட்ட டாக்டர் பாலாஜி, படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அரசு மருத்துவமனையில் டாக்டர் காத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கத்திக்குத்து கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்து கிண்டி அரசு மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜி ஜெகன்நாதனை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இதன் பின்னர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தி.மு.க. ஆட்சியில் பெண்கள், காவல்துறையினர், டாக்டர்கள் என அனைவரின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், அடிப்படை கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் அரசு தோல்வியடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.