பாலிவுட்டில் 90 காலகட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் கோவிந்தா. இவரது வளைந்து ஆடும், நடன அசைவுகளுக்காகவே ரசிகர்கள் பட்டாளம் அதிகம். பல ஹிட் படங்களை கொடுத்து தன்னை முன்னிறுத்தி கொண்டார். ஜோதிகா, ரம்பா, லைலா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான '3 ரோசஸ்' படத்தில் ஒரு பாடலுக்கு கேமியோ என்ட்ரி கொடுத்து ஆடியிருப்பார்.
பாலிவுட்டின் பிரபல நடிகரான கோவிந்தாவின் மகன் யஷ்வர்தன் அகுஜா நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கோவிந்தா. இவருடைய நடிப்பில் வெளியான காமெடி படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றவை. 2019-ம் ஆண்டுக்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு, தொலைக்காட்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.
தற்போது அவருடைய மகன் யஷ்வர்தா அகுஜா நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். அப்படத்தினை தெலுங்கில் 'பேபி' படத்தின் மூலம் பிரபலமான சாய் ராஜேஷ் இயக்கவுள்ளார். இதனை மது மண்டேனா, அல்லு அரவிந்த் மற்றும் எஸ்கேஎன் பிலிம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
இதன் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு கோடையில் படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு ஆயத்தமாகி வருகிறது. தற்போது யஷ்வர்தன் அகுஜாவுக்கு நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.
60 வயதாகும் கோவிந்தா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்.பி.யானார். பின்னர் கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதோடு மக்களவை தேர்தலில் பிரசாரமும் செய்தார்.