திருவாடானை: திருவாடானை பகுதி கண்மாய்களில் தண்ணீர் நிறைய இருந்தும், கோடை விவசாயம் செய்ய விவசாயிகளிடம் ஆர்வம் இல்லாத நிலை இருந்து வருகிறது. மாவட்டத்திலேயே அதிகளவு திருவாடானை தாலுகாவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. வானம் பார்த்த பூமி என்ற போதிலும், இந்த பகுதியில் பெரிய பரப்பளவை கொண்ட அதிக அளவிலான கண்மாய்கள் ஏராளமாக உள்ளன. இப்பகுதி கண்மாய்களில் அரைக் கண்மாய் அளவு தண்ணீர் நிரம்பி விட்டாலே விவசாயத்திற்கு போதுமானது.
கடந்த ஆண்டு அதிக மழை பெய்ததால், இப்பகுதி கண்மாய்கள் நிரம்பி விட்டன.மேலும் கண்மாய் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தாத அளவிற்கு அடிக்கடி தொடர்ந்து மழை பெய்தது. இதனால் இப்பகுதி கண்மாய்களில் தண்ணீர் அப்படியே மீதம் ஆகிவிட்டது.பல வருடங்களுக்கு முன்பு சம்பா பட்டம் விவசாயம் முடிந்தவுடன் கண்மாயில் தண்ணீர் மீதம் இருந்தால் , உடனடியாக கோடை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். ஆனால் இப்போது முழு கொள்ளளவை தண்ணீர் எட்டிய நிலையிலும், கோடை விவசாயம் செய்ய விவசாயிகள் முன் வரவில்லை. பெரும்பான்மையான கிராமங்களில் கோடை விவசாயம் செய்ய விவசாயிகள் ஆர்வம் இல்லாமல் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ‘‘முன்பெல்லாம் விவசாயத்திற்கு அதிகளவில் செலவு ஏற்படாது. ஆகையால் கண்மாயில் தண்ணீர் மீதமிருந்தால் கோடை விவசாயத்தை ஆர்வமுடன் செய்தனர். ஆனால் இப்பொழுது விவசாயத்திற்கான விதை நெல் விலை உழவு ஆட்கள் கூலி மற்றும் இடுபொருட்கள் அதிக செலவு செய்ய வேண்டி உள்ளது. சம்பா பட்டத்தில் கணக்கு பார்க்காமல் விவசாயம் செய்து தான் ஆக வேண்டும். ஆனால் கோடை காலத்தில் அப்படி செய்ய முடியாது. மேலும் இப்பதியில் கட்டுப்பாடற்ற ஆடு, மாடுகள் காரணமாகவும் கோடை விவசாயம் செய்ய விவசாயிகள் முன் வரவில்லை’’ என்றனர்.
The post கண்மாய் நிறைய தண்ணீர் இருந்தும் விவசாயத்தில் ஆர்வம் காட்டாத விவசாயிகள் appeared first on Dinakaran.