கண்டாச்சிபுரம் அருகே ஏரிக்கரையில் தொன்மையான பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு

2 hours ago 3

கண்டாச்சிபுரம் : விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கீழ்வாலை- உடையாநத்தம் ஏரிக்கரையில் அமைந்துள்ள பாறை ஒன்றில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஓவியங்களை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினைச் சேர்ந்த பாலமுருகன், பழனிசாமி, திருவாமாத்தூர் கண. சரவணகுமார் கண்டறிந்தனர். உடையாநத்தம் ஏரிக்கரை அருகே உள்ள பாறையின் சாய்வான கிழக்கு பகுதியில் செஞ்சாந்து நிறத்தில் 4 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்த ஓவியங்களைப் பற்றி பாறை ஓவிய ஆய்வாளர் காந்தி ராஜன் கூறியதாவது: இடது பகுதியில் தனியாக உள்ள மனித உருவம் ஒரு கையை உயர்த்திய நிலையிலும், மற்றொரு கை கீழாகவும் உள்ளது. அதன் விரல்கள் விரித்த நிலையில் உள்ளது போல காணப்படுகிறது. மேலும் மனிதனின் தலை முடி பறந்த நிலையில் உள்ளது. இக்காட்சி ஒருவர் நடனமாடுவது போலவும் அல்லது எதிரேயுள்ள விலங்கு ஒன்றை பிடிக்க எத்தனிப்பது போலவும் காணப்படுகிறது.

மனித உருவம் எளிய கோட்டோவியமாக சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது. வலது பகுதியில் மேற்புறம் இரண்டு மான்கள் எளிமையான கோடுகளில் சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது. முதல் மானின் காலடியில் வட்டத்துக்குள் வட்டம் என்று காணப்படுகிறது. இக்காட்சி நீர் நிலைக்கு அருகில் மான்கள் நிற்பதை குறிக்கிறது. மேலும் ஒரு மானுக்கு மூன்று கொம்புகள் இருப்பது போன்று உள்ளது. இது ஓவியனின் கற்பனையாகக் கூட இருக்கலாம். ஏற்கனவே இந்த பகுதியிலுள்ள வேட்டவலத்தில் மூன்று கொம்புகளுடன் மான் ஒன்று வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மையப்பகுதியில் வட்ட வட்டங்களாக கோடுகள் சிவப்பு வண்ணத்தில் காணப்படுகின்றன. அதனருகே விலங்கு (மானின் தலை) ஒன்று தண்ணீர் குடிக்க வருவது போல் உள்ளது. வட்டத்திற்குள் வட்டங்கள் என சில வரைவுகள் காணப்படுகின்றன. இது நீர்நிலைகளை காட்டுவதாக இருக்கலாம் அல்லது வானியியல் தொடர்பானதாக இருக்கலாம் அல்லது அலங்கார வரைவுகளாக இருக்கலாம். இதுபோன்ற வரைவுகள் மதுரை அருகேயுள்ள திருவாதவூரில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

வட்டங்களால் சூழப்பட்ட நீர்நிலை போன்ற இடத்தில் உருவம் ஒன்று காணப்படுகிறது. இது மனித உருவமாக இருக்கக்கூடும். இடுப்பளவு தண்ணீரில் இருக்கும் மனிதனைப் போல உள்ளது. இவ்வோவியங்களில் உள்ள வட்டங்கள் பொறியில் மான்கள் மாட்ட ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகவும் இருக்கலாம். இங்குள்ள காட்சிகள், வண்ணங்கள் மற்றும் வரைவு முறைகளைக் கொண்டு இவை பெருங்கற்காலத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தில் வரைந்திருக்க கூடும். செஞ்சி பகுதியில் கிடைக்கும் பாறை ஓவியங்கள் தமிழகத்தின் தொல்லியல் மற்றும் பண்பாட்டு வரலாற்றுக்கும் முக்கியமான ஆதாரங்கள் ஆகும். இதனை பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

The post கண்டாச்சிபுரம் அருகே ஏரிக்கரையில் தொன்மையான பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article