சென்னை: கணிதம் மற்றும் அறிவியல் துறையை தேர்வு செய்து படிப்பதற்கும், அதில் ஆய்வுகளை மேற்கொள்ளவும் மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டுமென விண்வெளி அறிவியல் ஆய்வு மாநாட்டில் விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சொசைட்டி (டாஸ்), தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், சென்னை கணித அறிவியல் நிறுவனம், ராமன் ஆராய்ச்சி பவுண்டேஷன், பெங்களூரில் உள்ள இந்திய வான் இயற்பியல் நிறுவனம் ஆகியவை சாா்பில், இளைஞருக்கான வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆய்வு மாநாடு (ஒய்ஏஎஸ்எஸ்சி- 2025) சென்னை தரமணியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. கல்லூரி மாணவா்களுக்கு வானவியல் ஆய்வுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளை சோ்ந்த பேராசிரியா்கள், மாணவர்கள், அறிவியலாளர்கள் பங்கேற்றனர்.