கொச்சி,
கேரளாவை சேர்ந்த 1 வயதும் 4 மாதமும் ஆன பச்சிளம் குழந்தை ஒன்றின் தாய், தனது கணவரை விட்டுவிட்டு மாமனாருடன் ஓடிவிட்டார். எனவே அந்த குழந்தையை தாயிடம் கொடுக்காமல் அதன் தந்தையிடம் ஒப்படைக்க மாநில குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து குழந்தையின் தாய் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை நீதிபதி அருண் விசாரித்தார்.
இதில் நேற்று தீர்ப்பு வழங்கிய அவர், குழந்தையை அதன் தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது தாயின் உரிமை எனக்கூறிய நீதிபதி, தாய்ப்பால் கொடுப்பதும், தாய்ப்பால் ஊட்டப்பட வேண்டியதும் அரசியலமைப்பு சட்டம் 21-வது பிரிவின் கீழ் வாழும் உரிமைக்கான அம்சங்கள் என தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் குழந்தைகள் நல ஆணையத்தை கடுமையாக விமர்சித்த நீதிபதி, குழந்தையின் நலனையே ஆணையம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்றும், அதன் தாய் வேறு ஒருவருடன் வசிப்பதை குறித்து கவலைப்பட்டிருக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.