கட்டுமான நிறுவனம் நடத்தி ரூ.1.45 கோடி நூதன மோசடி: நிர்வாக இயக்குனர் கைது

1 month ago 5

சென்னை: கட்டுமான நிறுவனம் நடத்தி ரூ.1.45 கோடி மோசடி செய்து கோவையில் பதுங்கியிருந்த நிர்வாக இயக்குனரை சென்னை போலீசார் கைது செய்தனர். கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (55). இவர் சென்னை தி.நகரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கடந்த 2014ம் ஆண்டு ஊட்டியில் சொகுசு காட்டேஜ் கட்டி விற்று வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் மாத வாடகையாக பல ஆயிரம் கிடைக்கும் என்றும் விளம்பரம் செய்தார். இதனை நம்பி சென்னை சீனிவாசா அவென்யூ ரோட்டை சேர்ந்த இக்னேசியஸ் தாமஸ் சுரேஷ் என்பவர் கட்டுமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு, 2014ம் ஆண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார்.

அதன் பின்பு அவர் பல்வேறு தவணைகளாக ரூ.1.45 கோடியே முதலீடு செய்ததாக தெரிகிறது. பணத்தைப் பெற்ற பிறகு கட்டுமான பணிகள் எதையும் துவங்காமல் சங்கரலிங்கம் இருந்து வந்தார். இதனால் இக்னேசியஸ் தாமஸ் சுரேஷ் தான் செலுத்திய பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை தராமல் காலம் கடத்தி ஏமாற்றி வந்தார். இதனை தொடர்ந்து இக்னேசியஸ் தாமஸ் சுரேஷ் சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதனையறிந்த சங்கரலிங்கம் தலைமறைவானார். போலீசார் அவரை தேடி வந்தனர். விசாரணையில், அவர் கோவையில் பதுங்கியிருந்தது போலீசாருக்கு தெரிந்தது. இதனையடுத்து கோவை வந்த சென்னை போலீசார் வெள்ளக்கிணறில் பதுங்கி இருந்த கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சங்கரலிங்கத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சங்கரலிங்கம் இதுபோல் வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

The post கட்டுமான நிறுவனம் நடத்தி ரூ.1.45 கோடி நூதன மோசடி: நிர்வாக இயக்குனர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article