யாருக்கும் எந்தக் கட்சியும் நிரந்தரம் இல்லை என்பதுதான் புதுச்சேரி அரசியல் களத்தின் கடந்த கால வரலாறு. அதன்படி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலைக் கணக்குப் போட்டு இங்கே ஆளாளுக்கு தனி அணி திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி நடத்தும் என்.ஆர்.காங்கிரசுக்கும் பாஜக-வுக்கும் நீண்ட நாட்களாகவே சுமுகமான உறவு இல்லை.
அமைச்சர் பதவி, வாரியத் தலைவர் பதவிகள் கிடைக்காத பாஜக எம்எல்ஏ-க்கள் டெல்லிக்கே சென்று முதல்வர் ரங்கசாமி மீது புகார் வாசித்துவிட்டு வந்தார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு, “பாஜக வேண்டாம்ணே... தனித்தே நிற்போம்” என என்.ஆர்.காங்கிரஸ் காரர்களும் முதல்வர் ரங்கசாமிக்கு தூபம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.