கடையம் அருகே நாய்கள் விரட்டியதில் கீழே விழுந்து மிளா சாவு

1 month ago 8

கடையம்: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டம் கடையம் வனச்சரத்திற்குட்பட்ட கல்யாணிபுரம் பகுதியில் முள்ளிமலை பொத்தை உள்ளது. இங்கு கரடி, மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் பொத்தையிலிருந்து வெளியேறிய மிளா ஒன்றை அங்கிருந்த தெரு நாய்கள் விரட்டியது. இதனால் பயந்த மிளா, நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடியது. அப்போது ஆங்காங்கே இருக்கும் கம்பி வேலிகள் மற்றும் முள் புதரில் சிக்கி தடுமாறி கீழே விழுந்ததில் அதன் கொம்பு உடைந்தது. தொடர்ந்து சிறிது நேரத்தில் மிளா பரிதாபமாக உயிரிழந்தது.

தகவல் அறிந்து கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி உத்தரவின்படி வனக் காப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் வன காவலர் கண்ணன், வேட்டை தடுப்பு காவலர்கள் வேல்ராஜ், ரஞ்சித் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ஆண் மிளா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆழ்வார்குறிச்சி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து இலுப்பையாறு அடர்ந்த வனப்பகுதியில் தகனம் செய்யப்பட உள்ளது. நேற்று இதேபகுதியில் ராசம்மாள் என்பவரை கரடி தாக்கியது குறிப்பிடத்தக்கது. இதன் அருகிலேயே மிளா இறந்து கிடந்ததுள்ளது. மலை அடிவார பகுதி என்பதால் இந்த பகுதியில் தற்போது விலங்குகள் நடமாட தொடங்கியுள்ளது. இந்த பகுதியில் மின் கம்பங்கள் புதிதாக நட்டு மின்விளக்குகள் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கடையம் அருகே நாய்கள் விரட்டியதில் கீழே விழுந்து மிளா சாவு appeared first on Dinakaran.

Read Entire Article