
சென்னை,
நடிகரும் இயக்குனருமான ஹிப் ஹாப் ஆதி 'மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'பிடி சார்'. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்று வெற்றி படமாக அமைந்தது.
ஹிப் ஹாப் ஆதி தற்போது 'கடைசி உலகப் போர்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தில் நாசர், அழகன் பெருமாள், அனகா,ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.
போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் இரண்டாம் பாகம் வருமென ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதை ஹிப் ஹாப் ஆதி உறுதிசெய்துள்ளார்.

இந்நிலையில் இந்த படம் வருகின்ற 25ம் தேதி டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 4-ம் தேதி வெளியானது.