ஜோகன்னஸ்பர்க்,
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 4-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 283 ரன்கள் குவித்தது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 109 ரன்களும், திலக் வர்மா 120 ரன்களும் குவித்தனர். இதனையடுத்து 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 148 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், இந்த தொடரின் கடைசி இரு ஆட்டங்களில் விளையாடியது மிகவும் சவாலாக இருந்ததாக வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, உண்மையிலேயே கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடியது மிகவும் சவாலாக இருந்தது. ஏனெனில் கடைசியாக நாங்கள் விளையாடிய இரண்டு மைதானங்களும் அளவில் சிறியவை என்பதனால் பேட்ஸ்மேன்கள் அதிக ஆதிக்கம் செலுத்த முடியும்.
இருந்தாலும் நான் சில சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த போதும் விக்கெட் எடுக்க முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது. மைதான எல்லைகள் சிறிதாக இருந்ததால் பேட்ஸ்மேன்கள் தவறான ஒரு ஷாட் ஆடினால் நிச்சயம் விக்கெட் கிடைக்கும் என்று நினைத்தோம். இந்த தொடரில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் சென்றது பலனளித்தது. நானும் பிஷ்னாய் இருவரும் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து பந்துவீசி இருந்தோம்.
இறுதியாக இந்த தொடரில் நாங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. பேட்ஸ்மேன்கள் எனது பந்துவீச்சை அடிக்காமல் இருக்க நான் பெரும்பாலும் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசினேன். ஏனெனில் சின்ன எல்லைகள் இருக்கும் மைதானத்தில் அவர்களது ஆர்க்கில் பந்து வீசினால் நிச்சயம் பந்து வெளியே செல்லும் என்பதாலே இந்த யுக்தியை பயன்படுத்தினேன். இவ்வாறு அவர் கூறினார்.