கடுகு சிறுத்தாலும் காரம் மட்டுமல்ல அழகும் குறையாது!

4 hours ago 2

கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை என்று சொல்வார்கள். கடுகு என்பது சமையலுக்கு மிக முக்கியமான ஒரு பொருள். கடுகு இல்லாத சமையல் இல்லை என்று சொல்லும் அளவிற்கு சாப்பாட்டில் மிக முக்கியமானது கடுகு. ஆனால் அந்தக் கடுகு நமக்கு அழகையும் தரும். நம் அழகையும் காக்கும்.

1. அரிப்பு குணமாக:

தலையில் தொடர்ந்து அரிப்பு, பொடுகினால் செதில் செதிலாக வெள்ளையாக உதிர்வது சிலருக்கு தொல்லையாக இருக்கும். அதற்கு கடுகு நல்ல மருந்தாகும். கடுகு எண்ணெயை 6-7 சொட்டுகள் எடுத்து லேசாக சூடாக்கி அரிப்பு, தோல் உதிரும் இடங்களில் அழுத்தி 5 நிமிடம் மசாஜ் செய்வது போல் தேய்க்கவும். இப்படி செய்து வர அரிப்பு போய்விடும். ஒரு முறை செய்தாலே நல்ல குணம் தெரியும். இந்த எண்ணெய் தேய்த்த பிறகு குளிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே விட்டுவிடலாம்.

2. கண்களுக்கு கீழுள்ளவீக்கம் போக:

கண்களுக்கு கீழே பைபோன்ற வீக்கம் இருந்தால், அதற்கு கடுகைப் பொடி செய்து சலித்து எடுத்து, அதை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் கலந்து குழைத்து, கண்களுக்கு கீழே தடவவும். தொடர்ந்து இதனை செய்துவர வீக்கம் குறைந்து கண்களும் பளிச்சிடும்.

3.சருமம் பளிச்சிட:

பயணத்தினால் ஏற்படும் தூசியாலும், அசுத்தமான காற்றினாலும் கருத்து பாதிக்கப்படும் சருமத்தை பளிச்சிட செய்ய, கால் தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி பாசிப்பருப்பு இவற்றை, ஒரு தேக்கரண்டி தயிரில் கலந்து இரவு ஊறவிட்டு மறுநாள் இதனை அரைத்து முகத்தில் பேக் போல போட்டு சிறிது நேரம் ஊறவிட்டு பின் குளிக்க கறுத்த சருமம் பளிச்சிடும்.

4. வேண்டாத ரோமங்களை நீக்க:

ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெய், ஒரு தேக்கரண்டி கடலைமாவு, ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு இவை முன்றையும் சேர்த்து குழைத்து வேண்டாத ரோமங்கள் உள்ள பகுதியில் தடவி, பின் முழுமையாக காய்ந்து போகும் முன்பு தேய்த்துக் கழுவி வர, வேண்டாத முடிகள் உதிர்ந்து அழகு கூடும்.

5. வரிகள், கோடுகள் மறைய:

சிலருக்கு வயிற்றுப் பகுதியில் வரிகள், கோடுகள் போன்றவை இருக்கும். இதற்கு இரண்டு தேக்கரண்டி கடுகு எண்ணெயை சூடாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் கலந்து வைக்கவும். கர்ப்ப காலத்தில் தினமும் இந்த எண்ணெயை வயிற்றில் பரவலாக தடவி அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு குளிக்க, சருமத்தில் இருக்கும் வரிகள், கோடுகள் மறையும்.

– கவிதா பாலாஜிகணேஷ்.

The post கடுகு சிறுத்தாலும் காரம் மட்டுமல்ல அழகும் குறையாது! appeared first on Dinakaran.

Read Entire Article