மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் துக்கங்கள் உண்டு. நோய்கள் உண்டு. வலிகள் உண்டு. காரணம், ஆத்மாவானது பௌதிகமான சரீரத்தை, எடுத்துக் கொண்டு வருகின்ற பொழுது, அந்த சரீரத்திற்கு, அவர்கள் செய்த வினையின் காரணமாக அவஸ்தைகள் ஏற்படுகின்றன. அவஸ்தை என்பதற்கு துன்பம் என்று பொருள் அல்ல. துன்பமோ இன்பமோ அனுபவிக்கும் நிலைக்கு அவஸ்தை என்று பெயர். கர்ம பூமியில் (அதாவது நாம் இருக்கக்கூடிய உலகத்தில்) இருக்கும் வரை அவஸ்தைகள் இருக்கவே செய்யும். நமக்கும் மகான்களுக்கும் என்ன வேறுபாடு என்று சொன்னால், நாம் அவஸ்தை நிலையைப் புரிந்துகொள்ளவில்லை, அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். இதைப் புரிந்துகொண்டால் கடவுளை வணங்குபவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்? என்கிற கேள்விக்கு பதில் கிடைத்துவிடும். இருவரிடமும்
கஷ்டம் போகிறது. அந்தக் கஷ்டம் நம்மைப் போன்ற சாமானியர்களை கஷ்டப்படுத்துகிறது. மகான்களிடம் போனால் கஷ்டம் கஷ்டப்படுகிறது. இதைத்தான் திருவள்ளுவர் ஒரு திருக்குறளில் மிக அழகாக விளக்குகிறார்.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
இடையூறுகள் வந்த போது அதற்காக வருந்தாத மனத்தெளிவு உள்ளவர்கள், துன்பத்துக்குத் துன்பம் உண்டாக்கி அதனைப் போக்கி விடுவார்கள் என்பது இக்குறளின் பொருள்.
மகான் ஆளவந்தாருக்கு (வைணவ ஆச்சாரியார் – ராமானுஜரின் குரு) ராஜப்பிளவை என்னும் தீவிரமான நோய் வந்தது (முதுகுத்தண்டில் ஒரு புற்றுநோய் கட்டி என்று சொல்லலாம்) அது தரும் வலியை சாதாரணமானவர் களால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனாலும் ‘‘இது வினை வசத்தால் வந்தது. இதற்கு நாம் என்ன செய்யமுடியும்? அது பாட்டுக்கு இருந்து கொண்டு போகட்டும்’’ என்று அவர் தம்முடைய பணியைச் செய்துகொண்டே இருந்தார். திருவண்ணாமலையில் ரமண மகரிஷிக்கும் இப்படித்தான் ஒரு நோய் வந்தது. ஒரு முறை அந்த நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. அப்பொழுதும் அவர் மயக்க மருந்து எடுத்துக் கொள்ளவில்லை. தியானத்தில் இருந்தார். எனவே மகான்கள் துன்பங்களை பொருட்படுத்தவில்லை. அதை ஒரு வாய்ப்பாகக்கூட எடுத்துக் கொண்டார்கள்.
இன்னும் சொல்லப் போனால் அவர்கள் இந்த நோயை நீக்கிக் கொள்ள வேண்டும் என்றுகூட இறைவனிடம் கேட்பதில்லை. அம்மங்கி அம்மாள் என்று ஒருவர் திருவரங்கத்தில் இருந்தார். அவர் நோவு சாற்றிக்கொண்டு இருந்தார். வைணவத்தில் நோய்வாய்ப் பட்டிருந்தார் என்று சொல்லமாட்டார்கள். ஏதோ பெருமாள் மாலையை சாற்றிக் கொண்டிருப்பது போல நோயையும் சாற்றுதல் என்று குறிப்பிடுவார்கள். இப்படி நோயோடு போராடுவதைப் பார்த்த நஞ்ஜீயர் எனும் ஆசாரியார், ‘‘நீங்கள் இறைவனிடம் பிரார்த்திக்ககூடாதா? நீங்கள் பிரார்த்தனை செய்தால் ஒரு நொடியில் உங்கள் நோயைத் தீர்த்து விடுவானே’’ என்று கேட்ட பொழுது, அவர் திருமங்கையாழ்வார் பாசுரத்தில் ஒரு வரியைச் சொல்லிச் சிரித்தாராம்; திருமங்கை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழியின் 3ம் பத்து 6ம் திருமொழி “தூவிரிய மலருழக்கி’’ பதிகத்தின் 9ம் பாசுரம் இது;
நிலையாளா நின் வணங்க வேண்டாயே ஆகிலும் என்
முலையாள ஒருநாள் உன் அகலத்தால் ஆளாயே
சிலையாளா மரமெய்த திறலாளா திருமெய்ய
மலையாளா நீயாள வளையாள மாட்டோமே
அவர் பாசுரத்தை முழுமையாகச் சொல்லாமல், அதன் உயிர் வரியைச் சொல்லிச் சிரித்தாராம். அந்த வரி ‘‘அவனாள வளையாள மாட்டோமே.’’ இதைக் கேட்டவுடன் நஞ்ஜீயர் நெகிழ்ந்து விட்டாராம். என்ன பொருள் தெரியுமா? இறைவன் எல்லாம் அறிந்தவன் என்றுதான் நாம் நம்புகின்றோம். அப்படி எல்லாம் அறிந்த இறைவன், நாம் நோய்வாய்ப்பட்டிருப்பதையும், துன்பப்படுவதையும் அறியாமல் இருப்பானா? அறிந்தவனுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அறியாதவனுக்கு சொல்வதால் பலன் இல்லை. அவனே காப்பாற்றினால் காப்பாற்றட்டும். இல்லாவிட்டால் போகட்டும். நான் ஏன் அவரிடம் போய் பிரார்த்தனை செய்ய வேண்டும்?’’ என்றாராம். இதுதான் மகான்களின் நிலை.
ஜெயதேவர், கை கால் இழந்து பாழும் கிணற்றில் விழுந்திருந்தபோது, அவரைக் காப்பாற்றி தன் அரண்மனைக்கு அழைத்து வந்த மன்னன், இத்தகைய படுபாதகத்தைச் செய்தது யார் என்று கேட்டபோது, ஜெயதேவர் சிரித்துக் கொண்டே ‘‘என்னுடைய வினை’’ என்று சொன்னார். மன்னருக்கு அவருடைய பதிலில் திருப்தி இல்லை. ஒரு நாள் ஏகாந்தத்தில் அவர் ஜெயதேவரிடம் கேட்கிறார்; ‘‘சுவாமி, தங்களைப் போன்ற மகான்களுக்கு இத்தகைய துன்பத்தை இறைவன் தரலாமா? இதிலே உள்ள நியாயம் என்ன?’’ ஜெயதேவர் சிரித்துக் கொண்டே பதில் சொல்லுகின்றார். ‘‘மன்னனே! நீ என்னுடைய கை, கால்கள் வெட்டப்பட்டதை நினைத்து வருந்துகின்றாய், நல்லது. என்னுடைய கை, கால்கள் இழந்தது குறித்து எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. அதைச் செய்தவர்கள் குறித்து வருத்தமும் இல்லை.
எது வர வேண்டுமோ அது வினைப்படி வந்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். இனி வருவதும் தருவதும் எதுவாக இருந்தாலும் அதை முழு மனதோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தோடு இருக்கின்றேன். எத்தனை பெரிய மகான்களாக இருந்தாலும், ஊழின் வலிமையைப் போக்கிக் கொள்ள முடியாது.’’ சற்று நிறுத்திவிட்டுச் சொன்னார்.‘‘ஏன் போக்கிக் கொள்ள வேண்டும். என்றோ செய்த தவறுக்கு ஏதோ ஒரு பிறவியில் வருகின்ற தண்டனையை ஏற்றுக் கொண்டு தானே ஆக வேண்டும். இதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நான் மகிழ்ச்சியோடும் ஆனந்தத்தோடும்தான் இருக்கின்றேன். பகவானையே எண்ணி எண்ணிப் பாடுகின்ற ஆனந்தத்தை அனுபவிக்கும்போது, கை கால்களை இழந்தது பெரிதல்ல. இந்த நிலையிலும் அந்த ஆனந்தத்தையும், அவனைப்பாடும் ஆற்றலையும் தந்த இறைவனுக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.’’மன்னனுக்கு இன்னும் புரியவில்லை; ‘‘சுவாமி, துன்பத்தையே இன்ப
மாகக் கருத முடியுமா?’’ என்று கேட்டார்.
அதற்கு ஜெயதேவர் சொன்னார்;‘‘துன்பத்தைக் கையாளத் தெரிந்தால் துன்பத்தையும் இன்பமாகக் கருத முடியும். எனக்கு கடவுள் உதவி செய்திருக்கிறார்.’’‘‘இதில் கடவுள் செய்யும் உதவி எது?’’‘‘மன்னா, துன்பம் வினையால் வருகிறது. அதைத் தடுக்க முடியாது. ஆனால், அந்தத் துன்பத்தை பொருட்படுத்தாத ஒரு மனநிலையை இறைவன் தந்திருக்கிறானே, அவனுக்கு நன்றி அல்லவா சொல்ல வேண்டும். துன்பத்திற்கு துன்பம் தரும் வலிமை அவன் தந்ததல்லவா. அதனால், என்னைத் துன்பப்படுத்த வந்த துன்பம் அல்லவா இப்பொழுது துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.’’வாழ்வியலில் துன்பத்தைத் தவிர்க்க முடியாது. துன்பத்தை எதிர்கொள்ளும் திறனையும், வைராக்கியத்தையும் இறையருளால் ஒவ்வொருவரும் பெறமுடியும். அப்படி பெற்றுவிட்டால் துன்பம்
துன்பமாகத் தெரியாது.
தேஜஸ்வி
The post கடவுளை வணங்குபவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்? appeared first on Dinakaran.