கடமையானாலும் பாராட்ட மறவாதீர்..!

3 months ago 23

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என ஆத்திசூடியில் பாடியிருக்கிறார் ஔவையார். ஆசிரியர் என்பவர் இறைவனுக்குச் சமமாகப் பார்க்கப்படுபவர் என்பது ஆகச்சிறந்த உண்மை. இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன், தன் குழந்தை மற்றும் இளமைப் பருவத்தை தாய் தந்தையருடன் செலவிடுவதை விட ஆசிரியருடன் தான் அதிகம் செலவிடுகிறான் எனலாம். நமக்குக் கல்விக் கண்களைத் திறந்துவைத்து அறியாமை இருளை போக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் இனிய நாளே ஆசிரியர் தினநாள். ஒரு வெற்றுத்தாளாய் பள்ளியில் காலடி எடுத்து வைப்பவர்களை அறிவுக்களஞ்சியங்களாக வெளிக்கொணருபவர்கள் ஆசிரியர்கள். நமது வாழ்வின் வழிகாட்டிகளாக வெளிச்சங்களைப் பாய்ச்சுபவர்களும் அவர்களே. அவர்களைப் பாராட்டி விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் துர்காதேவி.

ஆசிரியர் பணி குறித்தும் அவர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கும் எண்ணங்கள் ஏற்பட்டது குறித்தும் அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதிலிருந்து…

நம் வாழ்வில் எப்போதுமே ஆசிரியர்களுக்கு என ஒரு முக்கியமான இடம் உண்டு. மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். ஒரு குழந்தை தனது தாய் தந்தையருக்கு அடுத்து நல்லொழுக்கம், பண்பாடு, அறிவு, மரியாதை, கல்வி என அனைத்தையும் ஆசிரியரிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறது. இத்தகைய சிறப்பு மிகுந்த ஆசிரியரைப் பெருமைப்படுத்து வதற்காகவே ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இப்படியான ஆசிரியர் தினக்கொண்டாட்டங்களில் வழக்கமாக பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு நிர்வாகமும் மாணவர்களும் இனிப்புகளையும், சிறுசிறு பரிசுகளையும் வழங்கி வருவதுதான் கொண்டாட்டமாக இருந்துவரும் நடைமுறை வழக்கம். அந்த நடைமுறையைச் சற்று மாற்றி அவர்களை விருது கொடுத்து மகிழ்ச்சிப் படுத்தினால் என்ன என்கிற எண்ணங்கள் தோன்றியது. நானும் இருபது வருடங்களாக ஆசிரியர் பணிகளைச் செய்து வருகிறேன் என்பதும் ஒரு காரணம் தான். ஆசிரியர்களின் பணிச்சுமை தியாகம் போன்றவற்றை நன்றாக அறிந்தவள் என்கிற முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விருது அளித்து மகிழும் சந்தர்ப்பம் வாய்த்தது. இந்த ஆசிரியர் தின விழாவையே கொஞ்சம் பெரிய அளவில் திட்டமிட்டுக் கொண்டாடினால் என்ன என்று தோன்றியது. அதன் காரணமாக மூன்று மாதங்களாக நாங்கள் திட்டமிட்டு உழைத்தோம்.

முதலில் விருதுக்காக நிறைய விண்ணப்பங்கள் குவிந்தது. அதிலிருந்து நாங்கள் ஆசிரியர்களின் அனுபவம் மற்றும் அவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் விருதுக்காக நூற்றுக்கும் மேற்பட்டவர்களைத் தேர்வுசெய்தோம். விழாவில் ஆசிரியப்பெருமக்களின் சீரிய பணிகளையும், தியாகங்களையும் எடுத்துரைத்தார். மேலும் தனியார் பள்ளி அசோசியேஷன் செயலாளர் திரு. பிரதீப் குமார் அவர்களும் வந்திருந்து நிகழ்வை சிறப்பித்ததில் எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி. இவர்களோடு அரசுப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, ஆசிரியர் பணியில் பல்லாண்டுகள் அனுபவம் பெற்ற திருமதி. சங்கரி அவர்களும், தனியார் பள்ளி நிர்வாகி திரு. மாலதி அவர்களும் வந்திருந்து சான்றிதழ்களையும் விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தனர்.

எங்கள் தொண்டு நிறுவனம் மூலமாக பெண்களுக்கு நிறைய இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். ஏழை ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதாரங்களுக்கு ஏற்ற பல பயிற்சி வகுப்புகள் உதாரணமாக அழகுக்கலைப் பயிற்சி, ஆரி ஒர்க் பயிற்சி போன்றவற்றை வழங்கி வருகிறோம். மேலும் பொது மற்றும் தனியார் விழாக்களில் மீதமான உணவுகளைப் பெற்று சாலையோரம் வசிப்பவர்களுக்கு வழங்கி வருகிறோம். நாங்களும் அவ்வப்போது உணவு தயாரித்தும் வழங்கி வருகிறோம். தற்போது நூற்றி ஐந்து ஆசிரியப் பெருமக்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தது எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிக் கௌரவித்தோம். மொத்தத்தில் இந்த வருட ஆசிரியர் தின விழா எங்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துவிட்டது. இனிவரும் ஆண்டு களில் இதனைவிட மிகச்சிறந்த ஒன்றாக நடத்தி ஏராளமான ஆசிரியர்களை கௌரவிக்க வேண்டும் என்பதே எங்களது பேராசைகளில் ஒன்று. மகிழ்ச்சியில் பெரிய மகிழ்ச்சி மற்றவர்களை மகிழ்வித்துப் பார்ப்பதுதான். குறிப்பாக ‘‘மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா’’ என்கையில் பெண்களான நாம் சக பெண்களைக் கொண்டாட வேண்டும்.

இந்தக் கொண்டாட்டம் என்பது எல்லா துறைக்கும் பொருந்தும். மல்டி டாஸ்கிங்கில் எப்போதும் கை தேர்ந்தவர்கள் பெண்கள். வீட்டின் கடமைகள் அனைத்தும் முடித்து, தினமும் வேலைக்கும் சென்று குடும்பத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் பெண்கள் என்றுமே கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். உங்களுக்குள் உங்களை இணைத்துக்கொண்டு கொண்டாடி மகிழ்வது, சக பணியாளர்களைக் கௌரவிப்பது மன ரீதியாக லேசாக மாற்றி அடுத்தடுத்து வரும் காலங்களில் சிறப்பாக பணியாற்றவும் உந்துசக்தியாக அமையும். ஏதோ ஒரு வகையில் மகளிர் தினம், தீபாவளி, பொங்கல், ஆசிரியர் தினம் என அவரவருக்குத் தகுந்த சிறப்பு நாட்களைத் தேர்வு செய்து சில கொண்டாட்டங்கள், பரிசளிப்புகள், உணவு விருந்துகள் என கொடுக்க உளவியல் ரீதியாகவும் இது நிறுவனத்துக்கும் சரி, தனிமனித முன்னேற்றத்திற்கும் சரி சிறப்பான வளர்ச்சியைக் கொடுக்கும்.
– தனுஜா ஜெயராமன்.

The post கடமையானாலும் பாராட்ட மறவாதீர்..! appeared first on Dinakaran.

Read Entire Article