வருசநாடு: தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமனூர், கணேசபுரம், எட்டப்பராஜபுரம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தும்மக்குண்டு, குமணன்தொழு, கோம்பைத்தொழு, மூலக்கடை, உப்புத்துரை, தங்கம்மாள்புரம், உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் அவரை சாகுபடி நடைபெற்று வருகிறது. அவரைக்காய்களை 3 தரங்களாக பிரித்து ஆண்டிபட்டி, தேனி, கம்பம், சின்னமனூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வாரச் சந்தைகளுக்கு விவசாயிகள் அனுப்பி வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை மற்றும் கொளுத்தும் வெயில் காரணமாக அவரையில் மஞ்சள் நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. விவசாயிகள் பலவகை மருந்துகள் தெளித்தும் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என கவலை தெரிவிக்கின்றனர். இந்த நோய் தாக்கிய கொடிகளில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின்பு காய்ந்து உதிர்ந்து விடுகின்றன. இதனால் கொடிகள் பூ, பிஞ்சு விடாமல் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. அவரைக்கு போதிய விலை இருந்தும் மஞ்சள் நோய் தாக்கி இருப்பதால் விவசாயிகள் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில் அவரை சாகுபடி மஞ்சள் நோயால் மிகுந்த பாதிப்படைந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
The post கடமலைக்குண்டு பகுதியில் அவரையில் மஞ்சள்நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.