கடந்த 8 வருடங்களாக மந்தகதியில் கேளம்பாக்கம் புறவழிச்சாலை பணிகள்: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

1 week ago 3

திருப்போரூர், நவ.6: கேளம்பாக்கம் புறவழிச்சாலை பணிகள் கடந்த 8 வருடங்களாக மந்தகதியில் நடைபெற்று வருவதால், இப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையின் பிரதான சாலைகளுள் ஒன்றாக பழைய மாமல்லபுரம் சாலை எனப்படும் ராஜீவ்காந்தி சாலை உள்ளது. இந்த, சாலையில்தான் 5 பல்கலை கழகங்கள், 17 பொறியியல் கல்லூரிகள், 5 சட்ட கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும், 80க்கும் மேற்பட்ட தனியார் மென்பொருள் நிறுவனங்களும், அரசின் எல்காட் மென்பொருள் நிறுவனமும், 10க்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்களும் உள்ளன. இந்நிலையில், கடந்த 2006ம் ஆண்டு சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி வரை 42 கிமீ., தூரம் 6 வழிச்சாலையாக மாற்றப்படும் என அப்போதைய திமுக அரசின் முதல்வர் கருணாநிதி அறிவித்து, அவரது ஆட்சி காலத்திலேயே சிறுசேரி மென்பொருள் பூங்கா வரை அதை செயல்படுத்தியும் காட்டினார்.

இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, சிறுசேரி மென்பொருள் பூங்காவில் இருந்து பூஞ்சேரி வரை உயர்மட்டச்சாலை அமைக்கப்படும் என உறுதியளித்து அதற்கான திட்ட ஒப்புதலையும் வழங்கினார். இதற்காக சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம், படூர், கழிப்பட்டூர், கேளம்பாக்கம், தையூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு, திருப்போரூர், தண்டலம், வெங்களேரி, ஆலத்தூர் ஆகிய கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஆனால், முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் இந்த சாலை பணிகள் முடங்கியது. அதேநேரத்தில் போக்குவரத்து ெநரிசலை கருத்தில் கொண்டு படூரில் இருந்து தையூர் வரை கேளம்பாக்கம் வழியாக 4.67 கிமீ., ஒரு புறவழிச்சாலையும், காலவாக்கத்தில் இருந்து ஆலத்தூர் வரை திருப்போரூர் வழியாக 7.45 கிமீ., தூரத்திற்கு மற்றொரு புறவழிச்சாலையும் அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த இரண்டு புறவழிச்சாலை பணிகளுக்கும் அப்போதைய நிலவரப்படி ₹465 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவற்றில், நில உரிமையாளர்களுக்கு இழப்பீடாக ₹222 கோடியும், சாலை அமைக்கும் பணிகளுக்கு ₹243 கோடியும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த 2018ம் ஆண்டுதான் இரண்டு புறவழிச்சாலைகளின் பணிகள் தொடங்கப்பட்டு, காலவாக்கத்தில் இருந்து ஆலத்தூர் வரை உள்ள திருப்போரூர் புறவழிச்சாலை பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால், படூரில் இருந்து தையூர் வரை உள்ள புறவழிச்சாலை பணிகள் நீண்ட இழுவையாக நீடித்துக் கொண்டே போகிறது. இந்த சாலையின் குறுக்கே கேளம்பாக்கத்தில் இருந்து கோவளம் வரை செல்லும் இணைப்பு சாலை உள்ளதால், அதன் குறுக்கே பாலம் கட்ட வேண்டியநிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த சாலை வரை மட்டும் முதற்கட்ட பணிகள் நடைபெற்று, தற்காலிக போக்குவரத்து நடைபெற்று வந்தது. தற்போது, பாலப்பணிகள் முடிவடைந்து விட்டநிலையில், பாலத்தில் இருந்து தையூர் வரை உள்ள மீதமுள்ள புறவழிச்சாலைப் பணிகள் அண்மையில்தான் தொடங்கி உள்ளன.

தற்போது, மழைக்காலம் ெதாடங்கி விட்டதால், சாலை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள சாலைப்பணிகள் முடிய இன்னும் 6 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரை ஆகலாம் என நெடுஞ்சாலை துறையினர் தெரிவிக்கின்றனர். சுமார் 8 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த புறவழிச்சாலை பணியால் கேளம்பாக்கம், படூர் ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த இடங்களில் வாகனங்களில் சாலையை கடக்க 1 மணி நேரத்திற்கு மேலாவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே, நவீன தொழில் நுட்பம் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தி, படூர் – கேளம்பாக்கம் புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் அவதி
திருப்போரூர் பகுதியில் உள்ள புறவழிச்சாலையானது விவசாய நிலங்களுக்கு நடுவே அமைந்துள்ளது. இந்த சாலையை அமைத்தபோது, சாலையின் இருபுறமும் மண்ணை அணைத்து கொட்ட வேண்டும் என்பதற்காக இரு புறங்களில் இருந்தும் 10 அடி உயரத்திற்கு கால்வாய் போன்று தோண்டி அதிலிருந்து மண்ணை எடுத்து பயன்படுத்தி விட்டனர். கால்வாயில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வசதியாக இருக்கும் என்று கூறி பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதனால், திருப்போரூர் புறவழிச்சாலையில், சாலையின் இருபக்கமும் ராட்சத பள்ளம் உருவாகியுள்ளது. இதனால், விவசாய நிலங்களுக்கு சாலையில் இருந்து நேரடியாக செல்ல முடியாதநிலை உள்ளது. விவசாய விளை பொருட்கள், கதிர் அறுவடை இயந்திரங்களை சாலையில் இருந்து நிலத்திற்கு நேரடியாக செல்லாமல் பள்ளத்தில் இறங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

The post கடந்த 8 வருடங்களாக மந்தகதியில் கேளம்பாக்கம் புறவழிச்சாலை பணிகள்: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article