கடந்த 4 ஆண்டுகளில் 11,806 விதை நெல் மாதிரிகள் பரிசோதனை

4 hours ago 2

தஞ்சாவூர், மே 15: விதைதரங்களை நிர்ணயிப்பதில் விதைப்பரிசோதனை நிலையங்கள் முக்கிய பங்காற்றுவதாக விதை பரிசோதனை அலுவலர் சிவ.வீர பாண்டியன் தெரிவித்துள்ளார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின்கீழ் விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு துறை கட்டுப்பாட்டில் மாவட்ட அளவில் விதைப் பரிசோதனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாரியம்மன் கோயில் காட்டுத்தோட்டத்தில் விதைப் பரிசோதனை நிலையம் 1992ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த விதைப்பரிசோதனை நிலையம் புதுப்பிக்கப்பட்டு புதிதாக கட்டபட்டுள்ள ஒருங்கிணைந்த விதைசான்று மற்றும் உயிர்மச்சான்று அலுவலக வளாகத்தில் 2021ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இந்த விதைபரிசோதனை நிலையத்தில் அனைத்து வகையான நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆய்வக உபகரணங்களைக் கொண்டு விதைகளின் தரத்தை துல்லியமாகப் பரிசோதித்து தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவதில் பெரும் பங்காற்றி வருகிறது. இங்கு நெல், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை. எள், மக்காச்சோளம், பருத்தி மற்றும் சோயாமொச்சை பயிர்களின் விதை முளைப்புத் திறன் மற்றும் விதை தரத்தை நிர்ணயிக்கக்கூடிய இதரகாரணிகளான ஈரப்பதம், புறத்தூய்மை கலவன்கள் பரிசோதிக்கப்பட்டு பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகே சான்று பெற்ற விதைகளாக விவசாயிகளுக்கு வேளாண்துறையின் மூலம் வழங்கப்படுகிறது.

சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் பயன்படுத்துவதால் விதையின் தேவை குறைவதுடன் உற்பத்திக்கான செலவு குறைக்கப்பட்டு கூடுதல் விளைச்சல் கிடைக்கப்பெறுகிறது. மேலும் தனியார் விதை உற்பத்தி செய்யும் சான்றளிக்கப்பட்ட விதைகளும் விதை விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வரும்போது விதை ஆய்வாளர்கள் மூலம் விதை மாதிரி எடுக்கப்பட்டு விதைப் பரிசோதனையில் முளைப்புத்திறன் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.

தஞ்சாவூர் விதைப் பரிசோதனை நிலையத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நெல் பயிரில் 11806 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 826 மாதிரிகள் தரமற்றது எனவும், பயறு வகைபயிர்களில் 3019 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 100 மாதிரிகள் தரமற்றது எனவும், எண்ணெய் வித்துப்பயிர்களில் 730 விதை மாதிரிகளில் பரிசோதனை செய்யப்பட்டதில் 158 மாதிரிகள் தரமற்றது எனவும் பருத்தியில் 338 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 11 மாதிரிகள் தரக்குறைவானது எனவும் காய்கறிப் பயிர்களில் 36 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 14 விதை மாதிரிகள் தரமற்றது எனவும் கண்டறியப்பட்டது.

இதன் மூலம் தரமற்ற விதைகள் விவசாயிகளுக்கு கிடைப்பதைத் தடுப்பதில் விதைப் பரிசோதனை நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறதுஎன மாவட்ட விதைப் பரிசோதனை அலுவலர் சிவ வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

The post கடந்த 4 ஆண்டுகளில் 11,806 விதை நெல் மாதிரிகள் பரிசோதனை appeared first on Dinakaran.

Read Entire Article