கடந்த 30 ஆண்டுகளில் பூமியின் முக்கால் பகுதி நிலம் வறண்டு விட்டது: இந்தியாவில் பெரும் பாதிப்பு ஐநா பரபரப்பு அறிக்கை

1 month ago 5

புதுடெல்லி; கடந்த 30 ஆண்டுகளில் பூமியின் 77 சதவீதத்திற்கும் அதிகமான நிலப்பரப்பு வறண்ட காலநிலையை அனுபவித்ததாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐநாவின் பாலைவனமாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான மாநாட்டின் அறிக்கை சவுதி நாட்டின் ரியாத்தில் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: 2020ம் ஆண்டு வரை உள்ள கணக்கீடு அடிப்படையில் கடந்த 30 ஆண்டுகளில் பூமியின் 77 சதவீதம் நிலம் வறண்ட கால நிலைக்கு மாறிவிட்டது.

இதனால் உலக உலர்நிலங்கள் ஏறக்குறைய 4.3 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் வரை விரிவடைந்துள்ளன. இது இந்தியாவை விட கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பெரியது.இதை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தோல்வியுற்றால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகின் ஈரப்பதமான பகுதிகளில் மேலும் 3 சதவீதம் வறண்ட நிலங்களாக மாறும். கடந்த 30 ஆண்டுகளில் வறண்ட நிலங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை 230 கோடியாக அதிகரித்துள்ளது. 2100ம் ஆண்டில் 500 கோடி மக்கள் உலர் நிலங்களில் வசிக்கலாம்.

இந்த சூழலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 96 சதவீதம் ஐரோப்பா, மேற்கு அமெரிக்காவின் சில பகுதிகள், பிரேசில், ஆசியா மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ளன. தென் சூடான் மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் நிலம் அதி வேகத்தில் வறண்ட நிலங்களாக மாறுகின்றன. சீனாவும் இதற்கு தப்பவில்லை. எகிப்து, கிழக்கு மற்றும் வடக்கு பாகிஸ்தான், இந்தியாவின் பெரும் பகுதிகள், வடகிழக்கு சீனாவில் அதிக மக்கள்தொகை கொண்ட உலர்நிலங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கடந்த 30 ஆண்டுகளில் பூமியின் முக்கால் பகுதி நிலம் வறண்டு விட்டது: இந்தியாவில் பெரும் பாதிப்பு ஐநா பரபரப்பு அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article