மும்பை : கடந்த 10 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட மராத்தி பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மராத்திய அமைப்புகள் மாநில அரசை குற்றம் சாட்டி வருகின்றன.மும்பை முழுவதிலும் கடந்த 10 ஆண்டுகளில், 100க்கும் மேற்பட்ட மராத்தி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 40 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மராத்தியில் இருந்து ஆங்கிலப் பள்ளிகளுக்கு மாறியுள்ளனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவதால் தாய்மொழியில் கல்வி கற்பது குறைந்து கொண்டே வருகிறது என கல்வி ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தாதரில் உள்ள பாரம்பரியமான ஒரு மராத்தி பள்ளி, 6 முதல் 10ம் வகுப்பு வரை வெறும் 18 மாணவர்களுடன் இயங்கி வருகிறது. எனவே தற்போது 6 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் 10ம் வகுப்பு முடித்த பிறகு பள்ளியை மூட திட்டமிட்டுள்ளது.
கடந்த 2019-20 ஆம் கல்வி ஆண்டில், மும்பை முழுவதும் 461 மராத்தி நடுநிலைப் பள்ளிகள் இருந்தன. 202425 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 421 ஆகக் குறைந்தது. அதேபோன்று மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. 6 ஆண்டுகளுக்கு முன்பு, 1,35,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த நிலையில், தற்போது 85,469 மாணவர்களாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று கடந்த 2014-15ம் கல்வி ஆண்டில் 368 மராத்திய நடுநிலைப் பள்ளிகளை மாநகராட்சி நடத்தி வந்தது. தற்போதைய கல்வி ஆண்டில் அந்த எண்ணிக்கை 262 ஆகக் குறைந்துள்ளது. ஆங்கிலப் பள்ளிகள் மீது மோகம் அதிகரித்து வந்தாலும், இந்த மோசமான சரிவுக்கு பள்ளிகளின் உள்கட்டமைப்பே காரணம் எனவும் ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.
The post கடந்த 10 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட மராத்தி பள்ளிகள் மூடல் appeared first on Dinakaran.