சென்னை: சென்னை எழும்பூர் புதுப்பேட்டை பகுதிகளில் இரவு நேரங்களில் அதிகளவில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் நுண்ணறிவு சிறப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி புதுப்பேட்டை சவுத் கூவம் சாலையில் மற்றும் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அருகே தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் பெண் ஒருவர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார்.
இதை பார்த்த தனிப்படையினர் அந்த பெண்ணை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் கஞ்சா சாக்லேட் இருந்தது தெரியவந்தது. உடனே தனிப்படையினர் அந்த பெண்ணை பிடித்து எழும்பூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் விசாரணை நடத்திய போது, புரசைவாக்கம் தாண்டவராயன் தெருவை சேர்ந்த பானுமதி (எ) உஷா (42) என்றும், இவர் பிரபல கஞ்சா பெண் வியாபாரியான வேலழகியின் வளர்ப்பு மகள் என தெரியவந்தது.
இவர் தனது நண்பர்களான பல்லவன் சாலையை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (19), பெரும்பாக்கம் எழில்நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (20) என தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் எழும்பூர் மற்றும் புதுப்பேட்டை பகுதியில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் பல நாட்களாக விற்பனை செய்ததும், இவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் உறுதியானது. அதைதொடர்ந்து பிரபல கஞ்சா வியாபாரியின் வளர்ப்பு மகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 230 கிராம் கஞ்சா சாக்லேட், 3 கிலோ கஞ்சா, 3 செல்போன், ரூ.60,880 ரொக்கம், ஒரு கத்தி மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல, வடமாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, சந்தேகப்படும்படியாக மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலம் இருப்பது தெரிய வந்தது. எனவே, காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தை சேர்ந்த டிப்புன் டிகல் (19), கலகான்டி மாவட்டத்தை சேர்ந்த பிபிக் நாயக் (19) மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் விசாரணை செய்தபோது ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இறங்கி ஆட்டோ, பஸ் ஆகியவற்றில் கஞ்சா கடத்திச் சென்று சென்னை புறநகர் கோயம்பேடு, சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கும்பலுக்கு உடந்தையாக செயல்படுபவர்கள் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த கஞ்சா வியாபாரியின் வளர்ப்பு மகள், நண்பர்கள் கைது: ரயிலில் கடத்தி வந்த இருவரும் சிக்கினர் appeared first on Dinakaran.