கங்குலியின் கடைசி போட்டியில் அவரை கேப்டனாக்கியது ஏன்..? - தோனி விளக்கம்

2 months ago 13

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் பல தொடர்களில் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.

விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர். மேலும் சச்சின், சேவாக், கங்குலி போன்ற ஜாம்பவான் வீரர்களும் தோனியின் தலைமையில் விளையாடி இருக்கிறார்கள். இதில் கங்குலி ஓய்வு பெறும்போது தோனி அவருக்கான மரியாதையை சிறந்த முறையில் வழங்கி வழி அனுப்பி வைத்தார்.

2008-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 5வது நாள் ஆட்டத்தில் போட்டி முடிவடையும் அரை மணி நேரத்திற்கு முன்னதாக கங்குலியிடம் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை வழங்கினார். அதை கொஞ்சமும் எதிர்பாராத கங்குலியும் மகிழ்ச்சியுடன் ஏற்று தனது கெரியரின் கடைசி நிமிடங்களில் இந்தியாவை வழி நடத்தி கேப்டனாகவே ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் அப்போட்டியில் இந்தியாவை தலைமை தாங்க கங்குலியை அழைத்த காரணம் பற்றி தோனி பேசியது பின்வருமாறு:-

"இந்தியா கண்டெடுத்த மகத்தான கேப்டன்களில் ஒருவருக்கு நீங்கள் இன்னும் எந்த சிறந்த வழியனுப்பும் நிகழ்வை ஏற்படுத்த முடியும்? கங்குலி தனது கெரியரின் கடைசி நாளில் களத்தில் நின்று கொண்டிருந்தார். எனவே அவரை கொஞ்சம் நேரம் இந்தியாவின் கேப்டனாக வழியனுப்புவதற்கான வாய்ப்பு கிடைத்தால் அதை ஏன் நம்மால் செய்து கொடுக்க முடியாது. அது போட்டியின் முடிவையும் பெரிதாக மாற்றாது. அதுவே அந்த முடிவை எடுப்பதற்கான காரணமாகும்.

அந்த கடைசி சில நிமிடங்களில் கங்குலி மகிழ்ச்சியாக இருந்தாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஏனெனில் அது திடீரென நடந்தது. எதுவும் திட்டமிடவில்லை. உங்களை சிறந்த முறையில் வழியனுப்ப இதுவே என்னால் முடிந்தது என்பதுபோல் அதை செய்தேன். அது 15 - 20 நிமிடமாக இருந்தாலும் அதை ஏன் செய்யக்கூடாது" என்று கூறினார்.

Read Entire Article