சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறது. ககன்யான் திட்டத்தின் படி எல்விஎம் மார்க் -3 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் விண்கலனில் இந்திய விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து 400 கி.மீ சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள். பிறகு மீண்டும் பூமியில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு இந்திய கடற்பரப்பில் விழச் செய்து மீட்டு வரப்படுவார்கள். இந்த திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில் தற்போது 2026ம் ஆண்டிற்கு திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ககன்யான் திட்டத்திற்காக ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனத்துடன் இஸ்ரோ அமலாக்க ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் இடையே நேற்று முன்தினம் அமலாக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் படி ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பும் வீரர்கள் மற்றும் கிரியூ மாடல் எனப்படும் வீரர்கள் இருக்கும் பகுதியை மீட்பது ஆகியவற்றை இரு விண்வெளி நிறுவனங்களும் இணைந்து செயல்படுத்தும். மேலும் தற்செயல் திட்டமிடலின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய கடற்பகுதிக்கு அருகில் விண்வெளி வீரர்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுக்கு உதவி செய்வார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post ககன்யான் திட்டத்திற்காக ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனத்துடன் இஸ்ரோ ஒப்பந்தம் appeared first on Dinakaran.