திருவொற்றியூர்: தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற இயக்கத்தை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வத்தார். அதன்படி, சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் வடக்கு பகுதி திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி 19வது வார்டு மாத்தூர், பொன்னியம்மன் நகரில் நடந்தது. பகுதி செயலாளர் புழல் நாராயணன் தலைமை வகித்தார். வார்டு செயலாளர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஏராளமானோர், வீடு வீடாகச் சென்று பொதுமக்கள், வியாபாரிகளிடம் திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் கொண்டு வந்த திட்டங்களையும், பயன்களையும் பல்வேறு துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் எடுத்துக் கூறினர்.
பின்னர் அரசின் திட்டங்கள் கிடைக்க பெறாமல் உள்ளதா என்பது குறித்த குறைகளையும் கேட்டு, குறை இருப்பின் அதை உடனடியாக தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தனர். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் 2026ல் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க தாங்கள் வாக்களிப்பதாக உறுதி அளித்து, திமுகவின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உறுப்பினராக சேர்ந்தனர். அதேபோல், திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி 10வது வார்டு சன்னதி தெருவில் நடந்தது. பகுதி செயலாளர் தி.மு.தனியரசு தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் குறிஞ்சிகணேசன் முன்னிலையில் நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் திமுக அரசு செய்த திட்டங்களை எடுத்து கூறி உறுப்பினர்களை சேர்த்தனர்.
The post ‘ஓரணியில் தமிழ்நாடு’ மாதவரம், திருவொற்றியூரில் திமுக உறுப்பினர் சேர்க்கை appeared first on Dinakaran.