காட்பாடி: வேலூர் மாவட்டம் காட்பாடி வடக்கு பகுதி திமுக செயலாளர் வன்னியராஜா-வேலூர் மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா தம்பதியின் மகள் விஷ்ணுபிரியாவுக்கும், வாலாஜா தாலுகா நவல்பூர் அரிகிருஷ்ணன்-ரமாதேவி தம்பதியின் மகன் சுரேஷ்குமாருக்கும் திருமணம் இன்று காலை காட்பாடி கல்புதூரில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின், திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது: எனது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமிட்டு பிள்ளையார் சுழி போட்டது காட்பாடி தொகுதிதான். நேற்று எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகளுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் இங்கு வந்து மணமக்களை வாழ்த்துவதற்கு காரணம் பொதுச்செயலாளர்தான்.
நான் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், அதற்கு பின்பு துணை முதலமைச்சர் ஆனபோது நிறைய பேர் என்னை வாழ்த்தினார்கள். பொதுச்செயலாளர் துரைமுருகன் என்னை வாழ்த்தும் போது, நீ என் பக்கத்து சீட்டுதானே. வா பார்த்துக்கொள்கிறேன் என்றார். துணை முதல்வராகி 9 மாதம் ஆகிவிட்டது. கடந்த 3 மாதமாக என்னிடம் திருமண தேதி வாங்கி வரவழைத்த பெருமை பொதுசெயலாளரைத்தான் சேரும். ஒரு காலத்தில் மகளிர் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். ஆனால் இன்று இங்கே நிறைய மகளிர் வந்திருப்பதை பார்க்கிறேன். இதுதான் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் கண்ட கனவு. பெண்கள் படிக்கவும், சுதந்திரமாக இருக்கவும் திட்டத்தை தீட்டியவர் கலைஞர். அதனை செய்து காட்டியவர் முதல்வர். பெண்கள் படிக்க வேண்டும், பொருளாதார ரீதியாக வளர வேண்டும்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திட்டத்தில் ஒவ்வொரு பூத்திலும் 30 சதவீதம் வாக்காளர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இங்கு வந்துள்ள ஒவ்வொருவரும் அரசு தூதுவராக இருந்து மக்களிடையே அரசு திட்டங்களை கொண்டு சென்று சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காட்பாடிக்கு வந்து பெருமை சேர்த்துள்ளார். அவர் அரசியல் பயணம் தொடங்கியபோது காட்பாடியில் கதிர்ஆனந்தை ஆதரித்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கினார். அவர் பேசியது எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் அவருக்கு ஞாபகம் உள்ளது. அந்தளவுக்கு அவருக்கு ஞாபக சக்தி உள்ளது. அந்த ஞாபக சக்தி அவருடைய தாத்தாவிடம் இருந்து பெற்றுள்ளார், கம்ப்யூட்டர் அறிவு’ என்றார்.
The post ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் பூத்திற்கு 30% வாக்காளர்களை சேர்க்க வேண்டும்: திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.