
மும்பை,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 252 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. ஜடேஜா பவுண்டரி அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக இந்த தொடர் நிறைவடைந்தவுடன் இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இது குறித்து ஜடேஜா தரப்பிலிருந்து எந்த வித அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜடேஜா பதிவிட்டுள்ளார். அதில், "தேவையற்ற வதந்திகள் வேண்டாம் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.