ஓபிஎஸ், சசிகலாவை சேர்க்க வேண்டும் என 6 மாஜிக்கள் சந்தித்ததில் இருந்தே மோதல்; செங்கோட்டையனை நிரந்தரமாக புறக்கணிக்க எடப்பாடி முடிவு: மாஜி எம்எல்ஏ பல்பாக்கியும் மேடையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு

1 week ago 2


அத்திக்கடவு, அவினாசி திட்டம் தொடர்பான பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரை கட்சியில் இருந்து ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார். முதல்வராக இருந்த ஜெயலலிதாவை வழிநடத்திச் சென்றவர் என்ற பெயரை பெற்றவர் செங்கோட்டையன். அவ்வளவு செல்வாக்கு நிறைந்த தலைவராக இருந்து வந்தார். 9 முறை கோபிசெட்டிப்பாளையத்தில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் கூவத்தூரில் யார் முதல்வர் என்ற தேர்வு நடந்த போது முதலில் செங்கோட்டையனிடம் தான் கேட்கப்பட்டது. அதிக பணம் செலவழிக்க தன்னிடம் பணம் கிடையாது என கூறி ஒதுங்கிக்கொண்டதாக கூறப்பட்டது.

அடுத்ததாக எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டவுடன் எல்லாவற்றுக்கும் தயார் எனக்கூறியதால் அவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் என கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில் எடப்பாடி கட்சி தலைமைக்கு வந்தபிறகு தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தார். இதையடுத்து பாஜவுடன் கூட்டணி சேர வேண்டும், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என 6 மாஜி அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். இதற்கான ஏற்பாடுகளை செய்து அவர்களை அழைத்துச் சென்றவர் செங்கோட்டையன். ஆனால் இவர்களின் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டார். அதன்பிறகு செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியே வைத்திருந்தார். எந்தவிதமான அரசியல் நிகழ்ச்கிக்கும் அவரை அழைப்பது கிடையாதாம். இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது.

இந்தநிலையில்தான் செங்கோட்டையன் தற்போது வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபோல அதிமுக மூத்த நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகழ் பாடுவதை விட்டு விட்டு எடப்பாடி பழனிசாமியின் புகழ் பாடுவதை மூத்த நிர்வாகிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் தாரமங்கலத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கூட்டத்தில் மூத்த நிர்வாகியும் மாஜி எம்எல்ஏவுமான பல்பாக்கி கிருஷ்ணன் மேடையில் இருந்து இறங்கி திடீரென வெளியேறிவிட்டார். மேடையில் பேசிக்கொண்டிருந்தவர்கள் எடப்பாடியின் புகழை பாடிக்கொண்டே இருந்தனர். இதனால், எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பேசாமல் எடப்பாடியின் புகழையே பேசுவதாக பல்பாக்கி கிருஷ்ணன், புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவனிடம் 3 முறை தெரிவித்தும் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதனால் அவர் மேடையில் இருந்து இறங்கி சென்றுவிட்டார். இவ்வாறு ஆங்காங்கே அதிமுக மூத்த நிர்வாகிகள் கொந்தளித்து உள்ள நிலையில் தற்போது, செங்கோட்டையன் புறக்கணிப்பு பூதாகராமாக வெடித்துள்ளது. செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கலாமா என எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்துள்ளது. அப்போது அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம், அவரைப்பற்றி யாரும் எதுவும் சொல்லவேண்டாம் என முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. செங்கோட்டையன் பின்னால் பாஜவும் சசிகலா தரப்பினரும் இருப்பதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

அதேநேரத்தில் செங்கோட்டையனுடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்த மாஜி அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகிய நிர்வாகிகளும் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவர்கள் மீது கைவைத்தால் கட்சி பெரும் பிளவை சந்திக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post ஓபிஎஸ், சசிகலாவை சேர்க்க வேண்டும் என 6 மாஜிக்கள் சந்தித்ததில் இருந்தே மோதல்; செங்கோட்டையனை நிரந்தரமாக புறக்கணிக்க எடப்பாடி முடிவு: மாஜி எம்எல்ஏ பல்பாக்கியும் மேடையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article