ஓட்டுனராக இருப்பதே சவால் தான் : பெண்ஓட்டுநர் தில்ஷாத்!

2 hours ago 2

பெண்கள் தங்களின் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள, தங்களது வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ள டாக்ஸி ஓட்டுனர் தொழிலை முன்னெடுத்து எப்படி வெற்றி கண்டார்கள் என்பதற்கு பெரும் உதாரண பெண்மணியாக திகழ்கிறார் சென்னையை சேர்ந்த தில்ஷாத். இத்தகைய வெற்றியினை பெற அவர்கள் எத்தகைய இடர்ப்பாடுகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது, எப்படி சமரசங்களை மேற்கொள்ள வேண்டி வந்தது, எப்படி உறவுகளின் ஏளனங்களை மீறி வெற்றியடைய வேண்டியிருந்தது என்பதை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் தில்ஷாத். இன்றைய காலகட்டத்தில் ஸ்கூட்டர், கார் போன்ற வாகனங்களை பெண்கள் ஓட்டினாலும், தொழில் முறையான ஓட்டுநர் என்கிற அளவில் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே அங்கொன்றும், இங்கொன்றுமாக பெண்கள் இயக்கும் நிலை உள்ளது. அதற்கு கூடுதல் நேர பணிச் சுமை, உடல் சோர்வு, இரவு நேர பணி உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி எனது குடும்ப பொருளாதாரத்தினை உயர்த்த வேண்டிய அவசியத்தால் இந்த ஓட்டுனர் பணிக்கு வந்தேன் என சுவாரஸியமாக பேசுகிறார் தில்ஷாத்.

உங்களை பற்றி..

நான் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு சிறுவயதிலேயே திருமணம் மூன்று குழந்தைகள் என குடும்ப அமைப்புக்குள் நுழைந்து விட்டேன். என்னுடையது காதல் திருமணம். அதிலும் மதம் கடந்த திருமணம் என்பதில் பெரும் சவால்களால் நிரம்பி இருந்தது. சில சொந்த காரணங்களால் திருமண வாழ்க்கை சில வருடங்களில் முடிவுக்கு வந்துவிட்டது. சிறு குழந்தைகள் மூன்று பேரோடு போராட்டங்களும் பிரச்னைகளும் அதிகமாக இருந்ததோடு, சாதாரண வாழ்வியலுக்கே போராடும் சூழல் தான். வாகன உதிரி பாகங்களை தயாரிக்கும் பணியில் வேலைக்கு சேர்ந்து மெக்கானிக் வரை உயர முடிந்தது. ஆனாலும் போதுமான வருமானங்கள் இல்லாமல் இந்த கார் ஓட்டுனர் வேலைக்கு வந்தேன். தற்போது ஓரளவுக்கு நன்றாக இருக்கிறேன் என்றால் அதற்கு இந்த தொழிலே காரணம்.

பெண்கள் ஓட்டுனராக இருப்பதன் சவால்கள் என்ன?

பெண்கள் ஓட்டுனராக இருப்பதே பெரும் சவால்கள் தான். இந்த பணிகளை மேற்கொள்ள ஆண்களை விட அதிக அளவு மனோபலமும் உடல் பலமும் தேவைப்படுகிறது. இந்த பணியில் தினந்தோறும் சவால்கள் தானே. பல்வேறு நபர்களை கஸ்டமர்களை நேரிடையாக பார்த்து பழகும் போது நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. இரவு பகல் நேரக் காலம் பாராது வேலை செய்ய வேண்டிய சூழலும் சவால் தான். நிறைய, தைரியமும் தன்னம்பிக்கையையும் கிடைத்தது ஓட்டுனரான பிறகு தான். ஓட்டுனர் தொழில் ஆண்களுக்கே பல்வேறு சவால்கள் நிரம்பியது பெண்கள் என்றால் கேட்கவா வேண்டும். உடல் பளுவும் நிறைய தேவைப்படும் தொழில் இது. ஆனால் பொதுவான வருமானம் கிடைத்து நிறைவாக வாழ முடிகிறது என்பதில் மகிழ்ச்சி தான்.

ஓட்டுனர் பணி குறித்து…

பெண் ஓட்டுனர் என்பதால் பத்திரமாக கொண்டு போய் சேர்ப்பார்களாக என பலருக்கு சந்தேகம் எழும். ஆனால் பெண்கள் தங்கள் கடமையிலும் பொறுப்பிலும் எப்போதுமே சிறந்தவர்கள். உங்களை நிச்சயமாக பத்திரமாக சேர்த்து விடுவார்கள். அடுத்த முறை பெண் ஓட்டுனர்கள் ஓட்டுகிறார்கள் எனில் நம்பிக்கையாக அமர்ந்து செல்லுங்கள். அதுவே எங்களுக்கு நீங்கள் செய்யும் பேருதவி. அதே போன்று பெண் ஓட்டுனர்களுக்கு இரவு நேர பணிகள் கொஞ்சம் கூடுதல் சுமை தான், பாதுகாப்பும் ரொம்ப முக்கியம் தான். சவால்கள் இல்லாமல் எந்த வேலை இருக்கிறது. திடீரென வண்டி எங்கேனும் நின்று விட்டால் சற்று கஷ்டம் தான். அப்போதெல்லாம் எனது சக டிரைவர் அண்ணாக்கள் எப்போதும் துணை நின்று உதவியிருக்கிறார்கள்.

ஓட்டுனர் தொழிலின் அனுபவங்கள்…

வண்டி ஓட்டிச் செல்லும் போது நிறைய சுவையான அனுபவங்கள் கசப்பான அனுபவங்கள் என பல இருக்கும். திடீரென வரும் மாதவிடாய் பிரச்னைகளை சமாளிப்பது என்பதெல்லாம் பெரும் சிரமமான அனுபவம். நம் ஊரில் வெளியிடங்களில் பொது இடங்களில் கழிப்பிடங்கள் போதுமான வசதிகளோடு இருக்காது என்பது பெரும் துயரம். தண்ணீர் கூட இல்லாத கழிப்பிடங்களை பயன்படுத்திய அனுபவங்கள் இருக்கிறது.

விருதுகள் மற்றும் பாராட்டுக்கள்…

என் பணிக்காக எனக்கு ஸ்டார் ஐகான் அவார்ட் உட்பட சில விருதுகள் பெற்றுள்ளேன். அதேபோன்று பல்வேறு பாராட்டுகளையும் பெற்றுள்ளேன். என் தோழி பானு என்னுடைய வாழ்க்கை முழுவதும் நிறைய பிரச்னைகளை கடந்து வர உறுதுணையாக இருக்கிறாள். எனது சக டிரைவர் அண்ணாக்களும் போதுமான உதவிகள் செய்து வருகிறார்கள். இந்த பணி மிகுந்த மன நிறைவான வாழ்க்கையை தந்திருக்கிறது என்பதையே பெரும் விருதாக பார்க்கிறேன்.

உங்கள் லட்சியங்கள்…

நான் அதிகம் படிக்கவில்லை. ஆனால் என் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் அதற்கான முழு வசதியும் செய்து கொடுப்பதை எனது கடமையாக நினைக்கிறேன். இதனை இத்தொழில் மூலம் சிறப்பாக செய்ய முடிவதில் மிகுந்த மகிழ்ச்சி. சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. என்னுடைய உறவினர்கள் முன் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்கிற எண்ணங்கள் உண்டு. என் குடும்பம் இன்று மூன்று வேளை சாப்பிடுகிறது என் பிள்ளைகளுக்கு கல்வியை கொடுக்கிறது என்பது இந்த ஓட்டுனர் பணி தான் காரணம். என் வாழ்வின் பெரும் முன்னேற்றத்திற்காக நேரம் காலம் பார்க்காமல் உழைத்து வருகிறேன் நிச்சயம் எனது கனவுகள் நிறைவேறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்கிறார் தில்ஷாத்.
– தனுஜா ஜெயராமன்

The post ஓட்டுனராக இருப்பதே சவால் தான் : பெண்ஓட்டுநர் தில்ஷாத்! appeared first on Dinakaran.

Read Entire Article