சென்னை: வாடகை வாகனத்துக்கான மஞ்சள் நிற பலகையுடன் பைக் டாக்சி இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில் ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்கள் சங்கத்தினருடன் போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனை நடத்தினார். இதில் அரசுத் தரப்பில் போக்குவரத்து ஆணையர் சுன்சோங்கம் ஜடக்சிரு, இணை ஆணையர் பொன் செந்தில்நாதன் உள்ளிட்டோரும், 25 சங்கங்களின் உறுப்பினர்களும் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தினர் பெரும்பாலானோர் முதல் 1.5 கிமீ-க்கு ரூ.50, அடுத்தடுத்த ஒவ்வொரு கிமீ-க்கும் ரூ.25 என ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தினர்.