ஓட்டல் அதிபர் கொலை வழக்கு; சோட்டா ராஜனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு

3 weeks ago 5

மும்பை,

மும்பையின் மத்திய பகுதியில் கம்தேவி என்ற இடத்தில் கோல்டன் கிரவுன் என்ற ஓட்டல் உள்ளது. இதன் உரிமையாளராக இருந்தவர் ஜெயஷெட்டி. இந்நிலையில், நிழலுலக தாதாவான சோட்டா ராஜன் என்பவரிடம் இருந்து அவருக்கு தொலைபேசி வழியே மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன.

இதுபற்றி புகார் அளித்ததும், மராட்டிய போலீசார் அவருக்கு பாதுகாப்பு வழங்கினர். எனினும், அவருக்கு வழங்கிய பாதுகாப்பை போலீசார் வாபஸ் பெற்ற 2 மாதங்களில், 2001-ம் ஆண்டு மே 4-ந்தேதி அவர் சுட்டு கொல்லப்பட்டார்.

ஓட்டலின் உள்ளே திடீரென புகுந்த 2 மர்ம நபர்கள் அவரை சுட்டு விட்டு தப்பினர். எனினும், ஓட்டல் மேலாளர் மற்றும் ஊழியர் ஒருவர் என இரண்டு பேர் அவர்களை துரத்தி சென்றனர். இதில், அவர்களில் ஒருவர் பிடிபட்டார்.

இந்த வழக்கு, மும்பை கோர்ட்டு ஒன்றில் கடந்த மே மாதம் 20ம் தேதி விசாரணைக்கு வந்தது. இதில் சிறப்பு நீதிபதி ஏ.எம். பாட்டீல், சோட்டா ராஜனை குற்றவாளி என தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

இந்த தண்டனையை எதிர்த்து ராஜன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தும், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்நிலையில், இந்த மனு இன்று மும்பை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோர் அடங்கிய அமர்வு சோட்டா ராஜனின் ஆயுள் தண்டனையை இடைநீக்கம் செய்து, அவருக்கு ரூ.1 லட்சம் பிணை தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இருப்பினும் மற்ற குற்ற வழக்குகள் தொடர்பாக ராஜன் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவில் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்ட சோட்டா ராஜன், பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article