லாகூர்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் லாகூரில் நேற்று நடந்த 8வது லீக் போட்டியில் பி பிரிவில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன் குவித்தது. இப்ராஹிம் ஸாட்ரன் 146 பந்தில் 12 பவுண்டரி, 6 சிக்சருடன் 177 ரன் விளாசினார். அஸ்மத்துல்லா ஒமர்சாய் 41, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, முகமது நபி தலா 40 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் பில்சால்ட் 12, பென் டக்கெட் 38, ஹாரி புரூக் 25, கேப்டன் பட்லர் 38 ரன்னில் அவுட்டாக அதிகபட்சமாக ஜோ ரூட் 120 ரன் அடித்தனர். 49.5 ஓவரில் 317 ரன்னுக்கு இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது. இதனால் 8 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது.
அந்த அணியின் பவுலிங்கில் அஸ்மத்துல்லா ஒமர்சாய் 5 விக்கெட் வீழ்த்தினார். இப்ராஹிம் ஸாட்ரன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் ஆப்கானிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது. முதல் போட்டியில் ஆஸி.யிடம் தோற்ற இங்கிலாந்து இந்த தோல்வியால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. 2023ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலக கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆப்கன் நேற்று அந்த அணியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்கு பின் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி கூறுகையில், “எங்களுடைய நாடு இந்த வெற்றியை நிச்சயம் கொண்டாடும். நாங்கள் அடுத்த போட்டியை நோக்கி செல்கிறோம். 2023ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்தி இருக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் நாங்கள் முன்னேறி வருகிறோம். இன்றைய ஆட்டம் பல நெருக்கடிகளை கொடுத்தது. எனினும் சவாலான நேரத்தில் ஆட்டத்தை நாங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். இந்த முடிவு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இப்ராஹிம் திறமையான வீரராக இருக்கிறார். 3 விக்கெட் இழந்த நிலையில் நாங்கள் நெருக்கடியில் சிக்கினோம். ஆனால் அந்த அழுத்தத்தை அவர் சிறப்பாக கையாண்டார். எனக்கும் இப்ராஹிமுக்கும் இடையே இருந்த பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமான ஒன்று. நான் பார்த்ததிலே சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் என்றால் அது இதுதான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் இதே நம்பிக்கையுடன் விளையாடுவோம்’’ என்றார்.
The post ஒவ்வொரு நாளும் நாங்கள் முன்னேறி வருகிறோம்: ஆப்கானிஸ்தான் கேப்டன் பேட்டி appeared first on Dinakaran.