ஒரே மேடையில் விஜய், திருமாவளவன்? - வெளியான பரபரப்பு தகவல்

2 months ago 14

சென்னை,

கடந்த மாதம் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், தங்களோடு கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும் என அறிவித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் சென்னையில் வரும் டிசம்பர் 6-ம் தேதி தனியார் வார இதழ் புத்தக வெளியீட்டு விழாவை நடத்த உள்ளது. இந்த புத்தக வெளியிட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகிய இருவரும் ஒன்றாக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அம்பேத்கர் நினைவு நாள் அன்று நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் புத்தகத்தை வெளியிட விஜய் புத்தகத்தை பெற்றுக் கொள்கிறார். ஏற்கனவே திருமாவளவன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என பேசியிருந்த வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பெரும் பேசு பொருளானது.

இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான ஆதவ் அர்ஜுனும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என பேசியிருந்தார். அவரது பேச்சு தி.மு.க. வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் திருமாவளவன் ஆதவ் அர்ஜுன் பேச்சால் தி.மு.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் தி.மு.க.வை ஊழல் கபடதாரிகள் என விஜய் கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் திராவிட மாடல் அரசு என்று கூறி மக்கள் விரோத அரசை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சரமாரியாக தாக்கி விஜய் பேசி இருந்தார்.

இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன், விஜய்யுடன் ஒரே மேடையை பகிர உள்ளது தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article