மும்பை,
மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு ஒரே மாதத்தில் 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. நேற்று மதியம் ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ரஷிய மொழியில் எழுதப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக நவம்பர் 16-ம் தேதி, ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மறு பக்கம் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி (சி இஓ) என்று கூறினார். மேலும் அவர் மிரட்டல் விடுப்பதற்கு முன் தொலைபேசியில் ஒரு பாடலைப் பாடியதாகக் கூறப்படுகிறது.
2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையில் சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம், தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 175 பேர் வரை உயிரிழந்தனர், 300 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.