ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு

3 hours ago 1

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றால் பல சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் ராம்நாத் கோவிந்த் குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது.

இதன்படி 3 சட்டப் பிரிவுகளில் திருத்தம், 12 புதிய சட்டப் பிரிவுகள் சேர்ப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களான டெல்லி, ஜம்மு - காஷ்மீர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான சட்டங்களில் திருத்தம் என, மொத்தம் 18 சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

ராம்நாத் கோவிந்த் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு, கடந்த 12-ந்தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, நேற்று மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப பரிந்துரை செய்வதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். கூட்டுக்குழு பரிசீலனையின் போது அனைத்துக் கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுக்குழுவில் 21 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி மற்றும் மணீஷ் திவாரி ஆகியோர் உள்ள நிலையில், தி.மு.க. சார்பில் டி.எம்.செல்வகணபதி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கல்யாண் பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் தர்மேந்திர யாதவ், ஹரீஷ் பாலயோகி, விஷ்ணுதத் சர்மா, சுப்ரியா சுலே, ஸ்ரீகாந்த் ஷிண்டே, அனுராக் சிங் தாக்கூர், சம்பித் பத்ரா ஆகியோரும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article