சென்னை: ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையத்தை (One Health and Climate Hub) அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காலநிலை மாற்றத்தின் காரணமாக, மக்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்த சிக்கல்களை எதிர்கொள்வதற்கான ஒரு முன்னோடி முயற்சியாக, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையில் ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையத்தை (One Health and Climate Hub) அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த நல்வாழ்வு என்பது, மக்கள், விலங்குகள் மற்றும் சூழலியல் அமைப்புகளின் நல்வாழ்வை சமநிலைப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஓர் ஒருங்கிணைந்த மற்றும் ஓரலகுக் கட்டமைப்பு என உலக சுகாதார நிறுவனம் (WHO) வரையறுத்துள்ளது. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள், நோய்க்கடத்திகள் வாயிலாகப் பரவும் நோய்கள், நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன், பல்லுயிர்ப்பெருக்கத்துக்கு ஏற்படும் இழப்பு, காலநிலை மாற்றம் போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு, பொது சுகாதாரம், கால்நடை மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சிகளை ஒருங்கிணைந்த நல்வாழ்வு மையம் வலியுறுத்துகிறது.
காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் முன்னோடியாக உள்ள மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, வெப்பநிலை அதிகரிப்பு, விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் பெருந்தொற்றுகள், நோய்க்கடத்திகள் வாயிலாகப் பரவும் நோய்கள், கடலோரப்பகுதிகளின் பாதிப்புகள் மற்றும் பல்லுயிர்ப்பெருக்கத்திற்கு ஏற்படும் இழப்பு உள்ளிட்ட தனித்தன்மை வாய்ந்த பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு, குறிப்பாக, பழங்குடியினர் வாழும் பகுதிகள், கடலோரப் பகுதிகள் மற்றும் அதிக இடர்பாடுகளை எதிர்கொள்ளும் பகுதிகள் போன்ற பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் சமூகத்தினரின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கு ஒருங்கிணைந்த மற்றும் முன்னெச்சரிக்கை வாய்ந்த அணுகுமுறை அவசியமாகிறது.
ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையத்தை உருவாக்கியிருப்பது, காலநிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதற்கு, காலநிலை மாற்றத்திற்கேற்றவாறு தகவமைத்துக்கொள்ளக்கூடிய வகையிலான ஒரு சுகாதார அமைப்புமுறையை உருவாக்க வேண்டுமென்ற தமிழ்நாட்டின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது. காலநிலை மாற்றம் மற்றும் மக்கள் நலனுக்கான தேசிய திட்டத்தின் (NPCCHH) இலக்குகளை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தமிழ்நாட்டின் உறுதியான முயற்சிகளுடன் இணைப்பதன் வாயிலாக, நிலையான மற்றும் சம அளவிலான வளர்ச்சியை பேணுவதில் இந்த மையம் முக்கிய பங்காற்றும்.
1.ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம்:
ஒருங்கிணைந்த உத்திகளை உருவாக்கும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்களை கருத்தில் கொண்டு, காலநிலை மாற்றத்தால் உருவாகும் உடல்நல பாதிப்புகளுக்குத் தீர்வு காண்பதற்கான கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை உருவாக்கும்.
2. கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சியை வலுப்பெறச்செய்யும்:
காலநிலை மாற்றத்தால் உருவாகும் நோய்களைக் கண்காணிப்பதற்காக மாநில அளவிலான உறுதியான கண்காணிப்பு மற்றும் தரவு அமைப்புமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான ஏற்பாட்டுமுறைகளை உருவாக்கும்.
3. துறைகளுக்கிடையிலான இணக்கத்தை அதிகரிக்கும்:
தரவு மேலாண்மையை வலுப்படுத்துவதற்காக, சுகாதாரம், கால்நடை பராமரிப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வனம், பேரிடர் மேலாண்மை துறை போன்ற துறைகளுடனான இணக்கத்தை அதிகரிக்கும்.
4. திறன்களை மேம்படச் செய்யும்:
சுகாதார பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் ஆகியோர், ஒருங்கிணைந்த நல்வாழ்வு குறித்து மேலும் அறிந்துகொள்வதற்காகவும் அது குறித்த விழிப்புணர்வு பெற வேண்டியும் அவர்களுக்கு ஒருங்கிணைந்த நல்வாழ்வு குறித்த பயிற்சி வகுப்புகள் மற்றும் பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்யும்.
5. பசுமை சுகாதார உட்கட்டமைப்பு:
சூரிய ஒளி ஆற்றலால் செயல்படும் தகடுகள் மற்றும் எரிசக்தி சேமிப்பு திறன்மிகு அமைப்புமுறைகள் போன்று காலநிலை மாற்றத்திற்கேற்றவாறு தகவமைத்துக்கொள்ளக்கூடிய அமைப்புமுறைகளை உடைய மறுசீரமைப்பு மருத்துவமனைகள் அமைக்க வழிவகை செய்யும்.
6. புதுமையான தீர்வுகளை கண்டறிந்து அறிவித்தல்:
பிரச்சாரங்கள் மற்றும் சமூக ஈடுபாடு வாயிலாக ஒருங்கிணைந்த நல்வாழ்வு குறித்த ஆராய்ச்சியை ஊக்குவித்தல், நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்குதல், பயிற்சி தொகுதிகளை உருவாக்குதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் .
7. நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பாற்றல் (AMR):
நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பாற்றல் (AMR) சவால்களைக் கையாளுவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு சிறந்த முகமைகளுடன் இணைந்து செயல்படுதல்.
8. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் தொடர்பான நோய்களை கண்டறிதல்:
இந்த மையம் சுகாதார பிரச்சினைகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்களை கண்டறிவதற்கு விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும். இதில், விலங்குகள் வழியாக மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள், நோய் கடத்திகள் வாயிலாக பரவும் நோய்கள், வெப்பதாக்கம் தொடர்பான நோய்கள், காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சுவாசக் கோளாறுகள் மற்றும் நீர் மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை புவியியல் ரீதியாக பரவுவதை அறிந்துக்கொள்வதாகும். இந்த மையம் சுகாதார நிபுணர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொற்றுநோயியல் வல்லுநர்களுடன் ஒருங்கிணைந்து நோய் பரவுதல் குறித்த வரலாற்றுத் தரவுகளை பகுப்பாய்வு செய்து அவற்றை காலநிலை நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும்.
இந்த மையம், காலநிலைச் சூழ்நிலைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் ஏற்படும் நோய்களின் தீவிரத்தன்மையை மதிப்பிடுவதற்கு செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி முன்கூட்டியே கண்டறிந்து செயல்படுத்துவதற்கான மாதிரிகளை உருவாக்குவதற்கு செயல்படும். இது பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகள் போன்ற பாதிப்புக்குள்ளாகக்கூடிய சமூகங்களை கவனத்தில் கொண்டு, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்களைக் கண்டறிவதற்கு மாநில அளவிலான தரவுத்தளத்தை உருவாக்கி, அதனை தொடர்ச்சியாக நாளதுவரையாக்கும். இந்த மையம் நோய் பரவுதலை முன்னரே கண்டறிந்து, நோய் ஏற்படாமல் தடுப்பதை உறுதி செய்வதற்காக, சுகாதாரப் பணியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் உட்பட தொடர்புடைய பொறுப்பாளர்களுக்கு நோய் பரவுதல் குறித்து கண்டறிந்தவற்றை தெரிவிக்கும்.
9. நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு அதிநவீன தொழில்நுட்ப ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மாற்ற மையத்தை நிறுவுதல்:
காலநிலை மாற்றத்தின் காரணமாக எளிதில் தோன்றி பரவுகிற நோய்களுக்கென, உடல்நலம் சார்ந்த, நிதி தொடர்பான மற்றும் நோய்த்தொற்று குறித்த விவரங்களைக் கண்காணித்து, தொகுத்து அதனை தொடர்ந்து அதற்கான தீர்வுகளை மேலாண்மை செய்வதற்காக மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வலுவான தரவு மேலாண்மை ஏற்பாட்டு முறைகள் ஏற்படுத்தப்படும். மாநில அளவில் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு அதிநவீன தொழில்நுட்ப ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மாற்ற மையம் ஒன்று நிறுவப்படும். மேலும் இந்த அமைப்பு, விலங்குகளினால் மனிதனுக்குப் பரவும் நோய்கள், நோய் கடத்திகளால் பரவும் நோய்கள், வெப்பத் தாக்கு விளைவு (பாதிப்பு), சுவாசக் கோளாறு நோய்கள் போன்ற, காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கிற நோய்கள் குறித்த நிகழ்வுகளின் நிகழ்நேர தரவுகளைச் சேகரித்தல், அவற்றைப் பகுப்பாய்வு செய்தல், அறிக்கையளித்தல் போன்றவற்றை உறுதி செய்யும். இந்தத் தரவுகள் தொகுக்கப்படுவதன் வாயிலாக, வருங்காலங்களில் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்சனைகள் முன்னதாகவே கண்டறியப்பட்டு தீர்வு காணப்படுவதால், நிதி ஒதுக்கீடு, சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் கொள்கை உருவாக்கம் போன்றவற்றினை செயல்படுத்த முடிகிறது.
மேலும், இந்தத் தரவுகள், முன்கூட்டியே கணிக்கக்கூடிய அமைப்புகளை உருவாக்குவதற்கும், காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிற சுகாதார இடர்பாடுகளை எதிர்கொள்ளும் திறனை மாவட்ட அளவில் மேம்படுத்துவதற்கும் துணைபுரியும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் இந்த மையத்திற்கு தலைமை வகிப்பார். தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் திட்ட இயக்குநர் (PD, TNHSP), உறுப்பினர் / செயலாளராகவும், தேசிய நல்வாழ்வு இயக்கத்தின் நிருவாக இயக்குநர் (MD, NHM), பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் (DPH&PM), மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக இயக்குநர் (DME&R), மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் (DM&RHS) இதன் உறுப்பினர்களாவர். மேலும் இது, நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்களைக் கொண்ட ஒரு செயலகத்தின் உதவியுடன் செயல்படுவதாக அமையும். ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம், காலநிலை தூண்டலால் ஏற்படும் உடல்நல சவால்களைச் எதிர்கொள்வதற்கான ஒரு வலிமையான, முற்போக்கு சிந்தனை அணுகுமுறையாக அமையும். இது, ஏற்படக்கூடிய சுகாதார கேடுகளை எதிர்கொள்வதற்கு தமிழ்நாட்டினை மேலும் ஆயத்தப்படுத்தும், மீள்தன்மையை அதிகரிப்பதோடு, நிலையான சுகாதார ஏற்பாட்டு முறைகளை ஊக்குவிக்கும். புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நடவடிக்கைகளை வளர்ப்பதன் வாயிலாக, இந்தியாவில் ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை உத்திகளுக்கு இந்த மையம் ஒரு முன்மாதிரியாக அமையும் என அரசு கூடுதல் தலைமை செயலாளர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
The post ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையத்தை அமைப்பதற்கான தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.