ஒரு ஜாதகத்தில் எந்தக் கிரகம் வலிமையாக இருக்க வேண்டும்?

5 hours ago 1

ஜோதிட ரகசியங்கள்

எந்தவொரு ஜாதகமாக இருந்தாலும் நான்கு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று லக்னம். இரண்டு ராசி. மூன்று சூரியன். நான்கு சந்திரன். இதில் லக்னம் சூரியனை அடிப்படையாகக் கொண்டும், ராசி சந்திரனை அடிப்படை யாகக் கொண்டும், பாவகங்கள் சூரியனை அடிப்படையாகக்கொண்ட லக்னத்தை அடிப்படையாகக் கொண்டும். தசா புத்திகள் சந்திரனை அடிப்படையாகக்கொண்டும் இயங்குகின்றன. லக்னம் என்பது சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் செய்யப்படுவது. உதாரணமாக சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் இருப்பார். சித்திரை மாதம் முதல் தேதி மேஷராசியின் முதல் பாகையில் இருப்பார். தோராயமாக மேஷராசி 30 பாகைகள் என்றால் சித்திரை மாதம் 30 ஆம் நாள் அவர் மேஷராசியின் 30வது பாகைக்குள் இருப்பார்.இதை வைத்துக்கொண்டு சூரியனின் நிலையை நாம் மிக எளிதாக நிர்ணயித்து விடலாம்.

உதாரணமாக ஒருவர் சித்திரை மாதம் ஒன்றாம் தேதி பிறந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். கண்ணை மூடிக்கொண்டு அவருடைய ஜாதகத்தில் சூரியன் மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் இருக்கிறார் என்பதைச் சொல்லி விடலாம்.சித்திரை மாதம் எட்டாம் தேதி அவர் பிறந்திருக்கிறார் என்று சொன்னால் சூரியன் அவருடைய ஜாதகத்தில் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் இருக்கிறார் என்று சொல்லி விடலாம்.மார்கழி மாதம் இரண்டாம் தேதி பிறந்திருந்தால் அந்த ஜாதகரின் சூரியன் தனுசு ராசியில் மூல நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் இருப்பதை நாம் மிக எளிதாகச் சொல்லி விடலாம். அதைப்போலவே பிறந்த லக்னத்தையும் கணக்கிடுவது எளிது. உதாரணமாக தை மாதம் மூன்றாம் தேதி அவர் பிறந்திருக்கிறார், காலை 7:00 மணிக்கு பிறந்திருக்கிறார் என்றால் அவருடைய பிறந்த லக்னத்தை எந்த பஞ்சாங்கமும் பார்க்காமல் டக்கென்று மகர லக்கினம் என்று சொல்லி விடலாம்.

நான் மாசி மாதத்தில் காலை 7:00 மணிக்குப் பிறந்தேன். என்னுடைய லக்னம் கும்ப லக்னம். காரணம் சூரிய உதயத்தை ஒட்டி அந்த மாதம் முழுக்க பிறக்கும் குழந்தைகளுக்கு லக்னம் கும்பத்தில் தான் விழும். அதே மாசிமாதம் சூரிய உதயம் கடந்து 2 மணி நேரம் கழித்து பிறந்தால் அந்த லக்னம் மீனலக்னமாக மாறும்.4 மணி நேரம் கழித்தால் மேஷ லக்கனமாகும். இது தோராயக்கணக்கு. ஜாதகம் சரியா என்பதைச் சரி பார்க்கும் கணக்கு.இதைச் சொல்வதற்கு காரணம் ஒரு ஜாதகத்தின் வலிமையை லக்னம்தீர்மானிக்கிறது. லக்ன புள்ளியை சூரியன் தீர்மானிப்பதால், ஒரு ஜாதகத்தின் தலை எழுத்தை நிர்ணயிப்பது பிரதானமாக சூரியன்தான்.இன்னொரு விதத்திலும் இதை நாம் பார்க்கலாம். மற்ற கிரகங்கள் எல்லாமே சூரியனிடமிருந்து ஒளி பெறுவதுதான். நம்முடைய பூமிக்கு வலிமையான கதிர்கள் எல்லா கிரகங்களில் இருந்து வந்தாலும் மற்ற கிரகங்களில் இருந்து வருவது சூரிய ஒளியின் மாற்றப்பட்ட பிரதிபலிப்பு. உதாரணமாக ஒரு கண்ணாடியில் மோதினால் சூரியஒளி ஒரு மாதிரியாக வரும். ஒரு பாறையில் மோதி பிரதிபலித்தால் வேறு மாதிரியாக வரும்.

சன்னமான ஒரு வாயுவின் வழியாக பிரதிபலித்தால் அதனுடைய தன்மை வேறு மாதிரியாக இருக்கும்.ஆனால், வருகின்ற கதிர்வீச்சு எப்படி இருந்தாலும், மூலக் கதிர்கள் சூரியனிடமிருந்து தான் கிடைக்கின்றன.சூரியன் ஏன் முக்கியம் தெரியுமா? இத்தனை கிரகங்கள் இருந்தாலும், சூரியன் இல்லாவிட்டால் இந்த உலகம் என்ன ஆகும்? மற்ற கிரகங்களால் இந்த உலகத்தைக் காப்பாற்ற முடியுமா? முடியாது.எனவே தத்துவ ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் சூரியன் மிக முக்கியம் என்பதால் ஒரு ஜாதகத்தில் சூரியன் வலிமை அடைந்து விட்டால் அந்த ஜாதகருக்கு ஆயுள், ஆரோக்கியம், தலைமைப் பதவி முதலிய விஷயங்கள் கிடைத்துவிடும்.லக்கினத்திற்கு அடுத்து ராசி. ராசியை உடல் என்று சொல்வார்கள். ராசியை கொடுக்கக்கூடிய சந்திரனை மனம் என்றும் சொல்வார்கள். பௌதிகமாகக் குறிப்பது உடல். சூட்சுமமாகக் குறிப்பது மனம்.லக்னத்தைப் போலவே ராசியும் முக்கியம். காரணம் ஒரு கிரகத்தின் பலனை ஊட்டக் கூடியவர் சந்திரன்தான். தன்னுடைய தசாபுத்திகளின் மூலமாக அவர்தான் அந்த நன்மையையோ தீமையையோ அந்த ஜாதகருக்கு செய்கின்றார்.

ஒருவருக்கு பிறக்கும்போது கேது தசை நடைபெறுகிறது என்று சொன்னால், சந்திரன் கேதுவின் மூன்று நட்சத்திரங்களில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார் என்று பொருள். எனவே கேது திசையை கேது இயக்கினாலும், அந்த இயக்கத்துக்கு துணை புரிவது சந்திரன்தான்.காரணம் நாம் வாழ்வது நம்முடைய உடலாலும் மனதாலும். எனவே அனுபவிக்கக்கூடிய இன்பங்களும் துன்பங்களும் உடலையோ மனதையோ சார்ந்ததாக இருக்கின்றன. இதைத் தீர்மானிப்பது சந்திரன்தான். ஆனால் சந்திரனுக்கு ஒளி கொடுப்பது சூரியன்தான் என்பதால் சந்திரனு டைய பலம் கூட சூரியனைச் சார்ந்ததாகவே இருக்கிறது. எனவே தான் சூரியனுடைய முழு ஒளியை பௌர்ணமி அன்று சந்திரன் பெற்று, அந்த சந்திரன் பிரகாசமாக இருக்கின்ற வேளையில் சரியான கோணத்தில் அதாவது சரியான லக்ன புள்ளியில் பிறக்கக்கூடிய ஒரு குழந்தை மிகச் சிறந்த அறிவாளியாகவும் தலைமைப் பதவி எளிதில் அடைபவனாகவும் இருக்கிறது. இதைத்தான் ஜோதிடத்தில் பௌர்ணமி யோகம் என்று சொல்கிறார்கள்.அதைப்போலவே, தசாபுத்திகள் வந்து கொண்டே இருக்கும்.

120 ஆண்டுகளுக்கும் தசாபுத்தி கணக்கைப் போட்டுவிடலாம். ஆனால் அதை அனுபவிப்பதற்கு ஆயுள் இருக்க வேண்டுமே. ஆயுளுக்கும் மறை முகமாக துணைபுரிவது தலைமைக் கிரகமான சூரியன் தான்.ஒருவருடைய ஜாதகத்தில் மிகச்சிறந்த வலிமையை சூரியன் பெற்று விட்டால், அவருக்கு ஆரோக்கியக் குறைவும் ஆயுள் குறைவும் பெரும்பாலும் ஏற்படுவது கிடையாது. ஜாதகத்தில் பல்வேறு கணக்குகள் இதற்கு இருக்கின்றன என்று சொன்னாலும் கூட, மறைமுகமாக அந்தக் கணக்குகளுக்கு ஆதாரசுருதியாக நிற்பது சூரியன்தான். அதனால் தான் நம்முடைய பெரியவர்கள், சனி நமஸ்காரம் சுக்கிர நமஸ்காரம் செய்யச் சொல்லவில்லை. காலை எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்தால் ஆயுள் ஆரோக்கியம் கிடைக்கும். மற்ற கிரகங்களால் வருகின்ற தோஷங்கள் நீங்கும் என்று சொல்லி வைத்தார்கள்.ராமாயணத்தில் கூட அகத்தியர் ராமனுடைய வெற்றிக்காக ஆதித்ய ஹிருதயம் என்கின்ற சூரிய வழிபாட்டுக்கான ஸ்லோகங்களைக் கொடுத்தார் என்று சொல்கிறோம்.எனவே, ஒரு ஜாதகத்தில் முதலில் கவனிக்க வேண்டியது சூரியன். அவர் அமர்ந்த இடம் அவருடைய வலிமை. அவர் வலிமையாக இருந்தால் என்னவெல்லாம் செய்வார் என்பதைப் பார்ப்போம்.

பராசரன்

The post ஒரு ஜாதகத்தில் எந்தக் கிரகம் வலிமையாக இருக்க வேண்டும்? appeared first on Dinakaran.

Read Entire Article