சென்னை: அத்தியாவசியப் பொருட்களை ஒரு குடும்ப அட்டைதாரருக்கு வழங்குவதற்கு தற்போது 2 முதல் 3 நிமிடங்களே மட்டுமே ஆவதால் தாமதம் ஆவதாக வந்த செய்தியில் உண்மை தன்மை இல்லை என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை: கூட்டுறவு நியாயவிலைக்கடைகளில் பிஓஎஸ் கருவியுடன் எடை தராசினை இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 28,736 கூட்டுறவு நியாயவிலைக்கடைகளில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
மின்னணு எடை தாரசுடன் விற்பனை முனைய கருவி இணைக்கப்பட்ட பிறகு தற்போது விற்பனை முனைய கருவியில் கைவிரல் ரேகையை பதிவு செய்த பின்னர் அத்தியாவசியப் பொருட்களை ஒரு குடும்ப அட்டைதாரருக்கு வழங்குவதற்கு தற்போது 2 முதல் 3 நிமிடங்களே மட்டுமே ஆகின்றன. தற்போது பகுதி நேர நியாயவிலைக்கடைகளில் உள்ள பழையவிற்பனை முனைய இயந்திரந்தில் கைவிரல் ரேகை சரிபார்க்கும் முறை எவ்வித சிக்கல்களும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.
நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப்பொருட்கள் விநியோகத்தில் ஏற்பட்ட காலதாமதம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை தொடர்ந்து, எவ்வித சிக்கல்களும் இல்லாமல் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு தேவையான தொழில் நுட்பமாற்றங்கள் மென்பொருள் நிறுவனம் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்கு தற்போது ஒருமுறை மட்டுமே குடும்ப அட்டைதாரரின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. மின்னணு எடை தராசில் 35 கிலோ அரிசியை ஒரு முறையிலேயே எடை போடுவதற்குரிய மாற்றங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு நகர்வு செய்யும் முதன்மைச் சங்கங்கள், சுய எடுப்புசங்கங்கள் அதன் பணியாளர் ஒருவரை நகர்வு பணியினை கண்காணிக்கும் வரையில் கிடங்களில் பணியமர்த்தம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் லாரியுடன் முதன்மைச் சங்க சுய எடுப்பு சங்கபணியாளர் ஒருவர் கண்டிப்பாக செல்லவேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து அத்தியாவசியப் பொருட்கள் சரியான எடையில் நகர்வு செய்யப்படுவதையும் லாரியில் நகர்வு பணியாளர்கள் செல்வதையும், நியாயவிலைக்கடைகளில் எவ்வித எடைகுறைவுமின்றி சரியான எடையில் இறக்கப்படுகின்றன என்பதையும் கூட்டுறவு சார்பதிவாளர், துணைப்பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மின்னணு எடை தாரசுடன் விற்பனை முனைய கருவி இணைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பாக பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 9ம் தேதி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதைத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களை ஒரு குடும்ப அட்டைதாரருக்கு வழங்குவதற்கு தற்போது 2 முதல் 3 நிமிடங்களே மட்டுமே ஆவதால் ஒரு நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில் உண்மை தன்மை இல்லை. இவ்வாறு கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post ஒரு குடும்ப அட்டைக்கு பொருள் வழங்க 2 முதல் 3 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது: தாமதம் ஆவதாக வந்த செய்தியில் உண்மை இல்லை: கூட்டுறவுத்துறை தகவல் appeared first on Dinakaran.