திருவொற்றியூர்: சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த போதைப்பொருள் ஏஜென்ட் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் பழைய குண்டூர் பகுதியை சேர்ந்தவர் முதாசீர் (30). கடந்த ஆண்டு மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் பதுக்கி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். போலீசார் பிடிக்க சென்றபோது தப்பி தலைமறைவானார். அப்போது இவரது கூட்டாளிகள் மகேஷ், பரூக், மிதுன், காதர் மொய்தீன், தீபன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருந்த முதாசீரை, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து வடக்கு கடற்கரை காவல் நிலையம் அழைத்து வந்தனர். முதாசீர் மீது ஆயிரம்விளக்கு, நந்தம்பாக்கம், எழும்பூர் காவல் நிலையங்களில் போதைப்பொருள் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முதாசீர் சென்னை செங்குன்றத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் கெட்ட நண்பர்களுடன் கைகோர்த்து போதைப்பொருள் விற்பனையில் இறங்கி சப்ளை செய்து வந்துள்ளார். ஒரு கிராம் பாக்கெட் மெத்தாம்பிட்டமின் போதைப்பொருளை டெலிவரி செய்தால் 500 ரூபாய் கமிஷனாக கொடுப்பாராம் முதாசீர். வடமாநில போதைப்பொருள் கும்பலிடமிருந்து இருந்து போதைப்பொருட்களை வாங்கி ஓட்டலில் நடக்கும் பார்ட்டிகள், மென்பொறியாளர்கள் தங்கி இருக்கும் இடங்கள் ஆகியவற்றை குறிவைத்து இவரது கும்பலை சேர்ந்தவர்கள் விற்பனை செய்து வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. முதாசீரிடம் இருந்து 5 கிராம் மெத்தாம்பெட்டமின் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post ஒரு கிராம் டெலிவரிக்கு ரூ500 கமிஷன் பிரபல போதைப்பொருள் ஏஜென்ட் கைது: வடக்கு கடற்கரை போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.