சென்னை: ஒன்றிய கல்வித்துறை அமைச்சரின் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2024-25ம் ஆண்டுக்கான நிதி ரூ.2,152 கோடியை ஒன்றிய அரசு இதுவரை விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இதனிடையே, புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காவிட்டால் கல்வி நிதி கிடையாது என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அவரின் கருத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்களும் கொதித்தெழுந்து தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
* தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: மாநில அரசை கலக்காமல் முற்றிலும் புறக்கணித்துவிட்டு பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து அபகரித்து வருவது கூட்டாட்சி தத்துவத்தை உதாசீனப்படுத்துகிற செயலாகும். ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்க வேண்டும், அதில் கூறப்பட்டுள்ள மும்மொழி கொள்கையின்படி நடைபெறுகிற இந்துத்துவாவை புகுத்துகிற பிஎம்ஸ்ரீ பள்ளிகளை ஏற்கவேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியதை பலமுறை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்து கடிதம் எழுதியிருக்கிறார். புதிய கல்விக்கொள்கையின் மூலமாக மும்மொழி திட்டம் என்ற போர்வையில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க ஒன்றிய கல்வித்துறை முயற்சி செய்கிறது. தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும் விரோதமாக செயல்படுகிற ஒன்றிய பாஜக அரசின் வேஷத்தை கண்டு தமிழக மக்கள் என்றைக்கும் ஏமாற மாட்டார்கள்.
* மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஒன்றிய அரசின் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ஆணவ பேச்சு கண்டனத்துக்குரியது. தேசியக் கல்விக் கொள்கையில் முன்மொழி திட்டத்தை ஒன்றிய அரசு திணிப்பதால் தமிழ்நாடு அதை கடுமையாக எதிர்த்து வருகிறது. அண்ணாவால் கொண்டுவரப்பட்ட இரு மொழித் திட்டம் தான் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய பாஜக அரசு இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பதற்கு தேசியக் கல்விக் கொள்கையை ஒரு கருவியாக பயன்படுத்தி, மாநில அரசுகளின் கல்வி உரிமையை நசுக்க நினைப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது.
* இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்: கடந்த 1965 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கை எதிர்த்து தமிழ்நாடு ஒருமுகமாக கொந்தளித்ததை ஒன்றிய அரசு நினைவில் கொள்ள வேண்டும். கடந்த ஜனவரி மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை, தமிழ்நாட்டின் இல்லம் தேடி கல்வித் திட்டம் நல்ல பலன்களை தந்திருப்பதை சுட்டிக்காட்டி, பாராட்டியிருக்கிறது. பாராட்டுப் பெற்ற மாநிலத்திற்கு ஊக்கம் தருவதற்கு பதிலாக, விடுவிக்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துப் பழிவாங்குவது, மிரட்டுவது போன்ற அடாவடி செயலில், ஒன்றிய அரசு தொடர்ந்து ஈடுபடுவதை தமிழ்நாடு மௌனசாட்சியாக கடந்து செல்லாது.
* அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்: தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது! இவர்களின் அரசியல் விளையாட்டால் உண்மையில் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் தான் என்பதை உணர வேண்டும்! கல்விக்கொள்கை உட்பட எந்த ஒரு காரணத்தைக் காட்டியும், நம் மாணவர்களுக்கு சேர வேண்டிய நிதி ஒருபோதும் தடைபடக் கூடாது! எனவே தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
* தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொள்ளாதவரை அதற்கான நிதியை வழங்க முடியாது என்று ஒன்றிய அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் இரு மொழிக் கொள்கை தான் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறது. அப்படி இருக்கும் பொழுது மும்மொழி கல்வியை கட்டாயப்படுத்துவது நிச்சயமாக ஏற்புடையதல்ல. பள்ளிகளுக்கு பெற வேண்டிய நிதியை பெற முடியாமல் இருப்பது, நமது மாணவர்களுக்கு தான் பெரிய இழப்பாகும். எனவே ஒன்றிய அரசும், தமிழக அரசும் கலந்தாலோசித்து இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும்.
* பாமக தலைவர் அன்புமணி: ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. அந்த நிதி தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கு தானே தவிர, புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்காகவோ, முன்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகவோ வழங்கப்படும் வெகுமதி அல்ல. அதனால், தேசியக் கல்விக் கொள்கையையும், தமிழ்நாட்டிற்கான நிதியையும் இணைத்து ஒன்றிய அரசு குழப்பிக் கொள்ளக் கூடாது.
ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால், அரசு பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடக்கின்றன. எனவே, நியாயத்தையும், மாநில அரசின் உரிமைகளையும் மதித்து ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும்.
* திமுக எம்பி வில்சன்: ஒன்றிய அரசு திணிக்கும் கொள்கைகளை தமிழக அரசு கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. இரு மொழிக் கொள்கையைத் தாண்டி கூடுதல் மொழிகளைக் கற்பதை தமிழ்நாடு எதிர்க்கவில்லை. ஆனால், தமிழக மக்களுக்கான சிறந்த கல்வி எது என்பதை மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அரசியல் சாசனம் உத்தரவாதம் அளித்துள்ள மாநில சுயாட்சியில் டெல்லியில் அமர்ந்து கொண்டு தலையிடும் ஒருவரால் தீர்மானிக்கப்படக் கூடாது.
ஒன்றிய அரசு அளிக்கும் நிதியானது அதன் சொந்த நிதி அல்ல. மாறாக மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணமாகும். எனவே, அத்தகைய நிதியின் பயன்பாட்டை பகுத்தறிவற்ற கொள்கைகளால் நிர்பந்திக்க முடியாது. கல்வியை பொறுத்தவரை நாங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறோம். கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் விவகாரத்தில் ஒன்றிய அரசின் திணிப்பு மற்றும் நிர்ப்பந்தச் செயல்களுக்கு எங்கள் தலைவர்- முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும் அடிபணிய மாட்டார். ஒன்றிய அமைச்சரே, உங்களின் அரசியல் கருத்துக்களையும், சித்தாந்தங்களையும் எங்கள் மீது நீங்கள் திணிக்க முடியாது. இந்த நிதியானது எமது நியாயமான பங்கு மற்றும் சட்டப்படியான உரிமை. இந்த நிதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
* தவெக தலைவர் விஜய்: மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?. மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய பாசிச அணுகுமுறையே. பாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்.
The post ஒன்றிய கல்வித்துறை அமைச்சரின் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்: பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.