காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த மீனவர்களை கடந்த மாதம் 27ம் தேதி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த மீனவரை மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும், அனைத்து மீனவர்களையும் விடுவிக்க வேண்டும், மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் கடந்த 10ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 17ம் தேதி மீனவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். மீனவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக காரைக்கால் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டமும் நடந்தது.
இந்நிலையில் இன்று (20ம் தேதி) மீனவர்கள் 11வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் துறைமுகம், கடற்கரையோரங்களில் 500 விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்த போராட்டத்தால் இதுவரை ரூ.18.50 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5,000 மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கியுள்ளனர்.
The post ஒன்றிய அரசைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் 11வது நாளாக ஸ்டிரைக் appeared first on Dinakaran.