ஒன்றிய அரசின் இறக்குமதி வரியால் 2 வாரத்தில் பாமாயில் விலை ரூ.525 உயர்ந்தது

2 months ago 11

விருதுநகர்: ஒன்றிய அரசின் இறக்குமதி வரி உயர்வால் பாமாயில் விலை 2 வாரத்தில் ரூ.525 அதிகரித்து விற்கப்படுகிறது. இந்தியாவின் உணவு எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய மாதம் தோறும் 15 லட்சம் டன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து 8 லட்சம் டன்கள் வரை பாமாயில் இறக்குமதியாகிறது. ஒன்றிய அரசின் இறக்குமதி வரி உயர்வால் கடந்த 2 வாரங்களுக்கு முன் ரூ.1,485க்கு விற்ற பாமாயில் டின், கடந்த வாரம் ரூ.375 உயர்ந்து ரூ.1,850க்கு விற்கப்பட்டது.

இந்த வாரம் மேலும் ரூ.150 உயர்ந்து ரூ.2,000 என விற்பனையானது. இதுகுறித்து விருதுநகர் எண்ணெய் மற்றும் புண்ணாக்கு விற்பனையாளர் சங்க தலைவர் சாவி.நாகராஜன் கூறுகையில், ‘‘ஒன்றிய அரசு இறக்குமதி வரியை உயர்த்தியதால் கடந்த வாரம் பாமாயில் டின்னுக்கு ரூ.375 உயர்ந்தது. மலேசிய அரசு ஏற்றுமதி வரியை குறைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அங்கு பாமாயில் உற்பத்தி குறைவு ஏற்பட்டு ஏற்றுமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பாமாயில் டின்னுக்கு மேலும் ரூ.150 அதிகரித்துள்ளது.

பாமாயில் விலை உயர்வை தொடர்ந்து கடலை எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.2,800 ஆகவும், நல்லெண்ணைய் டின் ரூ.6,105 ஆகவும் விற்பனையாகிறது. ஆயுத பூஜை வருவதை முன்னிட்டு தேவை அதிகரிப்பால் கொண்டக்கடலை ரூ.200 அதிகரித்து ரூ.8,200 ஆக விற்கப்படுகிறது. அதேசமயம் துவரம்பருப்பு ரூ.300 சரிந்து ரூ.10,500 ஆகவும், உருட்டு உளுந்தம் பருப்பு நாடு ரூ.150 குறைந்து ரூ.12,200 ஆகவும் விற்பனையாகிறது. பர்மா உளுந்தம்பருப்பு ரூ.200 குறைந்து ரூ.10,000, பாசிப்பருப்பு ரூ.100 குறைந்து ரூ.10,700 என விற்பனையாகிறது’’ என தெரிவித்தார்.

The post ஒன்றிய அரசின் இறக்குமதி வரியால் 2 வாரத்தில் பாமாயில் விலை ரூ.525 உயர்ந்தது appeared first on Dinakaran.

Read Entire Article