ஒட்டியம்பாக்கம் - கிண்டி புதைவட மின்பாதை பணி: ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

3 hours ago 2

சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலமாக புதியதாக அமைக்கப்பட்டுள்ள கிண்டி மற்றும் தரமணி 400 கிலோ வோல்ட் வளிமகாப்பு துணை மின் நிலையங்கள் மின்னூட்டம் பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு ரூ.718 கோடி திட்ட மதிப்பீட்டில் 32.09 கி.மீ. ஒட்டியம்பாக்கம் - கிண்டி 400 கிலோ வோல்ட்புதைவட மின்பாதை அமைக்கும் பணி 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மேடவாக்கம் ஜங்சனில் நடைபெற்று வரும் புதைவட மின்பாதை பணியினை தமிழ்நாடு மின் தொடரமைப்பு, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்து விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பொறியாளர்களை கேட்டுக் கொண்டார். இந்த புதைவட மின்பாதை அமைக்கும் பணி ஒட்டியம்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆலந்தூர் மற்றும் கிண்டி வரை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் சுமார் 90 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது.

மேலும், இப்பணிகளை விரைவாக முடிக்க பணியாற்றி வரும் மின்வாரிய அலுவலர்களை பாராட்டினார். எதிர்வரும் கோடைகால மின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து புதியதாக அமைக்கப்பட்டுள்ள கிண்டி மற்றும் தரமணி 400 கிலோ வோல்ட் வளிமகாப்பு துணை மின்நிலையங்களை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.

இத்திட்டத்தின் மூலம் தென்சென்னையில் மின் விநியோகத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்தி, உறுதியான மின்கட்டமைப்பின் மூலம் அரசு கட்டிடங்கள், தொழில் நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மெட்ரோ இரயில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சீரான தடையற்ற மின்சாரம் வழங்க இயலும். இந்த ஆய்வின்போது மேற்பார்வை பொறியாளர் ஆர். மணிமாறன், செயற்பொறியாளர்ஏ. மலர்விழி, உதவி செயற்பொறியாளர் வி. புஷ்பராஜ், சி. சுதா மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Read Entire Article