ஒகேனக்கல்லில் நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியானது கர்நாடக அணைகளில் இருந்து 60 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 20,000 கனஅடியாக அதிகரிப்பு

1 week ago 2

மேட்டூர்,: கர்நாடக அணை களில் இருந்து 60 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக உள்ளது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்த கனமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த அணைகளில் இருந்து, கடந்த வாரத்தில் 25 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. பின்னர், மழை சற்று தணிந்ததால் கடந்த சில நாட்களாக நீர்திறப்பு 12ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

இதனிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, கேஆர்எஸ் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து நேற்று இரவு 8 மணி அளவில் நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 4 மணியளவில் 16,000 கனஅடியாகவும், மாலை 6 மணிக்கு 18 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது.

இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 7,815 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 4 மணியளவில் 13,332 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு, 18 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

வரத்தை காட்டிலும் நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 113.37 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 112.71 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 82.31 டிஎம்சியாக உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வரும் நாட்களில் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஒகேனக்கல்லில் நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியானது கர்நாடக அணைகளில் இருந்து 60 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 20,000 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article